Last Updated : 11 Sep, 2018 06:00 PM

 

Published : 11 Sep 2018 06:00 PM
Last Updated : 11 Sep 2018 06:00 PM

இந்தியாவில் சிறந்த படங்கள் ஏன் வெளிநாட்டினரால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - அனுபம் கேர் வியப்பு

டொராண்டோ உலகத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ''இந்தியாவின் சிறந்த படங்களை ஏன் வெளிநாட்டவர்கள் மட்டுமே தயாரிக்கிறார்கள்'' என்று வியந்து ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

கனடா நாட்டின் டொராண்டோவில் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரீமியர் காட்சியாக ஆஸ்திரேலிய இயக்குநர் ஆண்டனி மாராஸ் இயக்கிய ''ஹோட்டல் மும்பை'' என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் 2008 செப்டம்பரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டது.

சர்வதேசத் திரைப்படவிழாவின் பிரீமியர் காட்சியின்போது பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு பாலிவுட் நடிகர் அனுபம் கேர் பேசியதாவது:

மிகவும் பொறுப்பும் அக்கறையோடும் எடுக்கப்பட்ட காந்தி திரைப்படத்தை ஒரு வெளிநாட்டினர்தான் தயாரித்தார். தற்போது இப்படமும் (ஹோட்டல் மும்பை) ஒரு வெளிநாட்டினர்தான் தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியதற்காக மிக்க நன்றி ஆண்டனி. மும்பைத் தாக்குதலில் தங்கள் உறவுகளை இழந்த ஆருயிர் சொந்தங்கள் இவ்வுலகில் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவர், பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அவர் மும்பை தீவிரவாதத் தாக்குதல் குறித்து ஒரு படத்தை எடுததார். அவர் மக்கள் துயரத்தில் பணம் சம்பாதிக்கவே விரும்பினார்.

ஆனால் ஆண்டனி எடுத்துள்ள 'ஹோட்டல் மும்பை' திரைப்படம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த தாக்குதலின் துயரத்திலிருந்து மனிதநேயத்தை வலியுறுத்துகிறது.

தாஜ் பேலஸ் ஹோட்டல் மற்றொரு ஹோட்டல் அல்ல. இது ஒரு ஐகான் மற்றும் அதன் உரிமையாளர் - டாட்டாஸ் - இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள மதிப்புமிக்க பெயராகும்.

இவ்வாறு பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேர், இது தனக்கு 501வது படம் என்பதையும் வெளிப்படுத்தினார். அப்போது தனது 85 வயது தாயார் வேறு எந்தப் படத்திற்கும் கேட்காத ஒரு கேள்வியை, ''இப்படத்தில் நீ எப்படி நடித்துள்ளாய்?'' என்று இப்படத்தின் போதுதான் கேட்டதாகத் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 6 அன்று தொடங்கிய டொராண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் செப்டம்பர் 7 அன்று பிரீமியர் காட்சியாக ஹோட்டல் மும்பை திரையிடப்பட்டது.

பாலிவுட் நடிகர் அனுபம் கேர் வியந்தபடி பியாண்ட் த கிளவுட்ஸ், ஸ்லம் டாக் மில்லியனர், லைப் ஆப் பை போன்ற திரைப்படங்கள் இந்திய கதைக் களனை அடிப்படையாகக்கொண்டு வெளிநாட்டினர் தயாரித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x