Published : 09 Sep 2018 09:11 AM
Last Updated : 09 Sep 2018 09:11 AM

உலக மசாலா: ஜீவனுள்ள பொம்மைகள்!

கம்பளியையும் ஊசியையும் வைத்துக்கொண்டு, அச்சு அசலான பூனைகளை உருவாக்கி வருகிறார் ஜப்பானைச் சேர்ந்த வாகுனெகோ. இவரது பூனை பொம்மைகளைப் பார்ப்பவர்கள், அவற்றை பொம்மை என்றே நம்புவதில்லை. அவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றன. பூனை முடிகளைப் போன்றே இருக்கும் தரமான கம்பளியை வாங்கி, பூனையின் தலையை உருவாக்குகிறார். பிறகு, கண்ணாடியால் ஆன கண்களைப் பொருத்தி, ஃப்ரேமில் வைத்து தைத்துவிடுகிறார். நிஜமான பூனை ஃபிரேமில் இருந்து எட்டிப் பார்ப்பது போல் தோன்றுகிறது. செல்லப் பூனைகளை வளர்ப்பவர்கள், அவை இறந்து போன பிறகு மறக்க முடியாமல் துன்பப்படுகிறார்கள். பூனையின் படத்தைக் கொடுத்து, அதேபோல் பொம்மை செய்து தரும்படிக் கேட்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த முப்பரிமாண பூனைப் பொம்மைகளை உருவாக்குவதாகச் சொல்கிறார் வாகு னெகோ. இவரது பொம்மைகள் பற்றி இணையதளங்களில் செய்தி வந்த பிறகு, உலகம் முழுவதிலுமிருந்து ஆர்டர்கள் குவிகின்றன. ஆனால், தற்போது ஜப்பானில் மட்டுமே பொம்மைகளை விற்கும் முடிவில் இருக்கிறார். ஏனென்றால் ஜப்பானியர்கள் பூனைகள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்துவதால், ஜப்பானில் வரும் ஆர்டர்களையே அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்கிறார்.

ஜீவனுள்ள பொம்மைகள்!

கடந்த ஒரு நூற்றாண்டில் மருத்துவ அறிவியல் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனாலும் இன்னும் பல உடல்நிலை பாதிப்பு களுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவற்றில் ஒன்று காணாமல் போகும் எலும்பு சிண்ட்ரோம். இதை Gorham_Stout disease என்று அழைக்கிறார்கள். இந்த நோய் 1838-ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டது. இதுவரை 64 பேர் பாதிக்கப்பட்டிப்பதாக அறியப்பட்டிருக்கிறது. பொதுவாக எலும்புகள் தாமாகவே புதுப்பித்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கக்கூடியவை. உடைந்தால்கூட வேகமாக சேர்ந்துவிடுபவை. ஸ்காட்லாந்தில் 44 வயது பெண் ஒருவர் எலும்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். 18 மாதங்களுக்கு முன்பு கடுமையான கால், கை எலும்பு வலியால் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். மருந்துகள் எடுத்துக்கொண்டும் பிரச்சினை சரியாகவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, எலும்புப் புற்றுநோயாக இருக்கும் என்று நினைத்து, அதற்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டன. ஆனால் பயாப்ஸியில் புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மருத்துவர்கள் இதுவரை எடுத்த பரிசோதனைகளை வைத்துப் பார்த்தபோதுதான், எலும்புகள் வேகமாக மறைந்து வருவதைக் கண்டறிந்தனர். இந்த நோயைக் கண்டுபிடிப்பதே கஷ்டம். அப்படியே கண்டுபிடித்தாலும் குணப்படுத்தக் கூடிய மருத்துவம் இல்லை. இந்த நோய் ஆண், பெண் இருபாலரையும் எந்த வயதினரையும் தாக்கக்கூடியது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள எலும்புகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டு, புது எலும்பு வைக்கலாம். ஆனால் இந்த அறுவை சிகிச்சை அவ்வளவு எளிதானது அல்ல. இந்த நோய் முதுகெலும்புக்குப் பரவாதவரை, உயிருக்கு ஆபத்து இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

அரிய நோயாக இருப்பதில் சற்று ஆறுதல்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x