Published : 08 Sep 2018 08:23 AM
Last Updated : 08 Sep 2018 08:23 AM

உலக மசாலா: குழந்தைகளுக்கு வந்த சோதனை!

ஜெர்மனியின் பின்ஸ் நகரில் இருக்கும் ‘கிராண்ட்மா கிச்சன்’ உணவகத்தில் மாலை 5 மணிக்கு மேல் 14 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளை அனுமதிப்பதில்லை. இந்தப் பாகுபாட்டைப் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். "சமீப ஆண்டுகளில் குழந்தைகளின் மனநிலையும் பெற்றோரின் மனநிலையும் அதிகமாக மாறிவிட்டது. குழந்தைகள் மேஜை மீது விரிக்கப்பட்ட துணிகளை இழுக்கிறார்கள். கண்ணாடி டம்ளர்களையும் தட்டுகளையும் உடைக்கிறார்கள். விலையுயர்ந்த கலைப்பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள். எந்தப் பெற்றோரும் குழந்தைகளின் செயல் களைக் கண்டிப்பதும் இல்லை, தடுப்பதும் இல்லை. இது பிற வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது. அதனால்தான் மாலை 5 மணிக்கு மேல் 14 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளை அனுமதிப்பதில்லை" என்கிறார் உணவகத்தின் நிறுவனர் ருடால்ஃப் மெர்கெல். மற்ற நேரங்களில் குழந்தைகள் உடைப்பதில்லையா? ‘‘மாலை நேரத்தில் மது அருந்துபவர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இடையூறு வராமல் இருப்பதற்கு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்கிறார் பெர்னார்ட் ஃப்ராங்க். உணவகத்துக்கு வரும் வழக்கமான வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டுப்பாட்டை வரவேற்கவே செய்கிறார்கள்.

இது என்ன குழந்தைகளுக்கு வந்த சோதனை!

கனடாவைச் சேர்ந்த சூசன், திருமணத்துக்கு 4 நாட்களுக்கு முன் தன்னுடைய கனவு திருமணத்தை நிறுத்திவிட்டார். திருமணத்துக்கு வருபவர்கள் சுமார் 1 லட்சம் ரூபாயைப் பரிசாக அளித்து, தன்னுடைய கனவு திருமணத்தை நடத்துவதற்கு உதவும்படி கேட்டிருந்தார். ஆனால் 10 பேர் மட்டுமே அவர் கேட்ட தொகையைக் கொடுத்திருந்ததால், மனம் உடைந்து போய் கல்யாணத்தையே நிறுத்திவிட்டார். "ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வேண்டும் என்பது என் லட்சியம், கனவு. ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை. நானும் என் வருங்காலக் கணவரும் சேர்ந்து உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்டுத் திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். இணையதளத்தில் திருமணம் குறித்து தகவல் வெளியிட்டேன். பலரும் நல்ல யோசனை என்று என்னைப் பாராட்டி, உதவுவதாகவும் சொன்னார்கள். அதனால் திருமணத்துக்கான இடம், உணவு, உடை என்று அத்தனையும் முடிவு செய்தோம். திருமண அழைப்பிதழை அனுப்பி, முன்கூட்டியே 1 லட்சம் ரூபாய் திருமணப் பரிசைக் கொடுத்துவிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் முதலில் வாக்குறுதி கொடுத்தவர்களில் 10 பேரே பணத்தை அனுப்பி வைத்தனர். இதனால் மிகவும் மனம் உடைந்து போய்விட்டேன். நான்கில் ஒரு பங்கு பணத்தை வைத்துக்கொண்டு, திருமணத்தை நடத்த முடியாது என்பதால், வேறுவழியின்றி 4 நாட்களுக்கு முன் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தேன். இதைப் பார்த்து நிதி திரட்ட சிலர் முயன்றனர். அவர்களாலும் நிதி சேகரிக்க இயலவில்லை. நாங்கள் இருவரும் எங்கள் உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டோம்" என்கிறார் சூசன்.

அவசியத்துக்கு உதவலாம்; ஆடம்பரத்துக்கு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x