Last Updated : 02 Sep, 2018 03:29 PM

 

Published : 02 Sep 2018 03:29 PM
Last Updated : 02 Sep 2018 03:29 PM

பாகிஸ்தானுக்கு ரூ.2,100 கோடி ராணுவ உதவி ரத்து: அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

தீவிரவாதக் குழுக்களான ஹக்கானி நெட்வொர்க், லஷ்கர் இ தொய்பா ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததையடுத்து, அந்த நாட்டு ராணுவத்துக்கு வழங்க இருந்த ரூ.2,100 கோடி(30 கோடி டாலர்) உதவியை ரத்து செய்து அமெரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

இதனால் பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வரும் 5-ம் தேதி அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேச உள்ள நிலையில், அமெரிக்கா ராணுவ உதவியை ரத்து செய்து திடீரென அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தீவிரவாதக் குழுக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வளர்த்து வருகிறது பாகிஸ்தான் என்று நீண்டகாலமாகவே அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாகவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒபாமா காலத்திலேயே உரசல் இருந்தது.

ஆனால், அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்ததில் இருந்து தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதிலும் பாகிஸ்தானை வெளிப்படையாக எச்சரித்து தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். இல்லாவிட்டால், அமெரிக்காவே நேரடியாகக் களத்தில் இறங்கும் என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெற்கு ஆசியக் கொள்கையை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார். அதில் பாகிஸ்தானில் செயல்படும் ஹக்கானி, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. அப்போதுதான் வளர்ச்சி நிதியுதவியை அளிக்க முடியும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே பாகிஸ்தான் தனது எல்லைப்பகுதியில் ஆப்கான் தலிபான்களையும், ஹக்கானி நெட்வொர்க் தீவிரவாதிகளையும் சுதந்திரமாகச் செயல்படவும், பயிற்சி பெறவும் அனுமதித்துள்ளது. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 155 கோடி அமெரிக்க டாலர் உதவியை பாகிஸ்தானுக்கு அளிப்பதில் இருந்து ரத்து செய்தது.

இந்தச் சூழலில் இப்போது பாகிஸ்தான் ராணுவ மேம்பாட்டுக்கு அளிக்க இருந்த ரூ.2,100 கோடி உதவியையும் ரத்து செய்து அமெரிக்க பென்டகன் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உத்தரவை அமல்படுத்த நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பென்டகன் செய்தித்தொடர்பாளர் கோன் பாக்னர் கூறுகையில், ''தெற்கு ஆசியக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதுபடி, பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்கி, தோல்வி அடைந்துவிட்டது. ஆதலால், அந்த நாட்டுக்கு வழங்க இருந்த ரூ.2,100 கோடி உதவியை ரத்து செய்துள்ளோம். இந்த நிதியை வேறு ஏதாவது பணிக்காக ஒதுக்க இருக்கிறோம்.

தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திக்கொண்டே வருவோம். குறிப்பாக ஹக்கானி, லஷ்கர் இ தொய்பா, தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், அதில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புதான் ஈடுபட்டது. மேலும், ஆப்கானிஸ்தானில் அமைதிப் பணியில் ஈடுபட்டுவரும் அமெரிக்க ராணுவத்தை அங்குள்ள தலிபான் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அரசு தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை நிறுத்த வேண்டும், எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x