Published : 02 Sep 2018 12:51 AM
Last Updated : 02 Sep 2018 12:51 AM

உலக மசாலா: 8 ஆண்டுகளாக கோழிக் கூண்டில் வாழ்ந்த பெண்

1980-ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் 9 வயது ‘மரியா இசபெல்’ குறித்த செய்திகள் நாட்டையே உலுக்கின. 8 ஆண்டுகளாக அந்தப் பெண் கோழிக் கூண்டுக்குள்ளேயே வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் மனிதர்களிடம் பழகாததால் மனிதருக்குரிய எந்தச் செயலையும் அவரால் செய்ய இயலவில்லை. கோழிகளைப்போலவே அவரது நடவடிக்கைகள் இருந்தன. இதனால் இவரை ‘சிக்கன் கேர்ள்’ என்று அழைத்தனர். கோயிம்ப்ரா மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு பிறந்த மரியாவுக்கு ஒரு வயதில் மனநலம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதனால் அவரது அம்மா, மரியாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதவில்லை. மருத்துவம் செய்வதற்கும் வசதி இல்லை. அருகில் இருந்த கோழிக்கூண்டுக்குள் விட்டுவிட்டார். கோழிகளுக்கான உணவைச் சாப்பிட்டு, கோழிகளுடனேயே வாழ்ந்து வந்தார். மரியாவின் அண்ணன் பள்ளிக்குச் சென்றார். தன்னுடைய தோழர்களிடம் கோழிக்கூண்டுக்குள் ஒரு பெண் இருப்பதாகச் சொன்னார். விஷயம் பரவியது. ஆனால் யாரும் உதவுவதற்குத் தயாராக இல்லை. ஒருமுறை உறவினர் வீட்டுக்கு வந்தபோது, மரியா கோழிக் கூண்டிலிருந்து தப்பித்து ஓடினார். அப்போதுதான் இப்படி ஒரு பெண் குழந்தை இருப்பது உறவினர்களுக்குத் தெரியவந்தது. உடனே பெற்றோர் மீது காவல் துறையில் புகார் கொடுத்துவிட்டார். மரியாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பல்வேறு குறைபாடுகளால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. ஆனால் எந்த மருத்துவமனையும் அவரை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. வேறு வழியின்றி குடும்பத்தினரிடமே மரியாவை விட்டுவிட்டார் அவரது உறவினர். மீண்டும் கோழிக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டார்.

டாரஸ் வேட்ராஸ் மருத்துவமனையில் ரேடியாலஜி டெக்னீஷியனாக இருந்த பிசாவோ, மரியாவுக்கு உதவி செய்ய முன்வந்தார். முதலில் மரியாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து 15 நாட்கள் மருத்துவம் செய்தார். அப்போதைய போர்ச்சுகல் அதிபரின் மனைவி, மரியாவுக்குபெரிய அளவில் உதவி செய்ய முன்வந்தார். அதனால் லிஸ்பனில் இருந்த மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். இவரது நிலையைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர்.

“ஒரு விலங்குக்கு உரிய மூளை வளர்ச்சிதான் அவரிடம் இருந்தது. எவ்வளவு வலித்தாலும் அழ மாட்டார். கோழிகளைப்போல நடப்பார், கத்துவார், சாப்பிடுவார். 27-வது வயதில்தான் அவரது மூர்க்கம் குறைந்தது. கடந்த 16 வருடங்களாக பாத்திமா மருத்துவமனையில் இருக்கிறார். சமீபத்தில் 48-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக இவரைப் பற்றிச் செய்தி வரும்போதெல்லாம், பத்திரிகைகள் அதிக அளவில் விற்பனையாகியிருக்கின்றன.  படங்கள் எடுப்பதற்கு அனுமதிப்பதில்லை. விஞ்ஞானிகள் மரியாவைப் பார்க்க விரும்புகிறார்கள். அவர் அனுமதியில்லாமல் பார்க்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது” என்கிறார் லிஸ்பனைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா கட்டாரினா.

மரியாவைப் பாதுகாக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x