Published : 01 Sep 2018 08:58 AM
Last Updated : 01 Sep 2018 08:58 AM

உலக மசாலா: பறவைகளை விரட்டும் பச்சை வண்ணம்

புதிய தொழில்நுட்பங்கள் பல துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளதைப்போல, விவசாயத்திலும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அமெரிக்காவின் ஓரிகனில் உள்ள ப்ளூபெர்ரி தோட்டத்தில் பறவைகளால், 25% நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அவர்களும் பல்வேறு வழிகளில் பறவைகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றனர். இறுதியில் தொழில்நுட்பத்தின் உதவியால் அது சாத்தியமாகியிருக்கிறது. ப்ளூபெர்ரி காய்க்க ஆரம்பித்த உடன் இந்தத் தோட்டத்தில் 6 இடங்களில் அக்ரிலேசர் அட்டானமிக்ஸ் என்ற தானியங்கி லேசர் துப்பாக்கிகள் வைக்கப்பட்டன. பறவைகள் கூட்டமாக ப்ளூபெர்ரிகளை நோக்கி வரும்போது தானியங்கி லேசர் துப்பாக்கிகளில் இருந்து பச்சை வண்ண ஒளிகள் பீய்ச்சப்படும். ஒளி வந்தவுடன் பறவைகள் சட்டென்று பறந்துவிடுகின்றன.

இப்படி இந்த ப்ளூபெர்ரி சீசன் முழுவதும் தானியங்கி லேசர்கள் பறவைகளை விரட்டியதன் விளைவு, அறுவடையில் தெரிந்திருக்கிறது. தானியங்கி லேசர் கருவிகள் மூலம் இரை தேடிவந்த 99% பறவைகள் விரட்டப்பட்டிருக்கின்றன. இந்த சீசனில் 2,62,500 கிலோ ப்ளூபெர்ரிகள் பறவைகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

இதன்மூலம் 70.77 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டிருக்கிறது. பறவைகளை விரட்டும் தானியங்கி லேசர் கருவி 4 ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வண்ண ஒளிகளை வெவ்வேறு அலை நீளங்களில் செலுத்திப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் பச்சை வண்ண ஒளிக்கே பறவைகளை விரட்டும் சக்தி அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சிவப்பு வண்ணத்தை விட பச்சை வண்ணத்தில் அகச்சிவப்புக் கதிர்வீச்சின் ஆபத்து குறைவாக இருந்திருக்கிறது.

‘‘பறவைகளின் கண்களும் மூளையும் சிவப்பு வண்ணத்தை விட, பச்சை வண்ணத்துக்கு அதிகமாக ஒத்துழைத்தன. சிவப்பை விட பச்சை 8 மடங்கு பலனை அதிகமாகத் தந்தது. ஆபத்தும் குறைவாக இருந்தது. வண்ணங்களை முடிவு செய்த பிறகு, ஒளியின் நீளத்தைப் பரிசோதித்தோம். எதில் பறவைகளை அதிகமாக விரட்ட முடிகிறது என்பதைத் தெரிந்துகொண்டோம். பிறகுதான் தானியங்கி லேசர் கருவிகளை உருவாக்க ஆரம்பித்தோம். இப்போது லேசர் கருவிகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விமான நிலையம், எண்ணெய் நிறுவனங்கள் உட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் லேசர் கருவிகள் இயங்கி வருகின்றன” என்கிறார் தானியங்கி லேசர் கருவிகளை உருவாக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரி ஸ்டெய்னர் ஹென்ஸ்கெஸ்.

ஒரு தானியங்கி லேசர் கருவியின் விலை சுமார் 7 லட்சம் ரூபாய். ஒரு பெரிய தோட்டத்துக்கு 2 கருவிகளாவது தேவைப்படும். இந்த லேசர் கருவிகள் எல்லாப் பறவைகளையும் விரட்டுவதில்லை. பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் பறவைகளையே விரட்டுகின்றன. அமெரிக்க விவசாயிகளிடம் இந்த லேசர் கருவிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 100 விவசாயிகள் இந்தக் கருவிகளைத் தங்கள் விளைநிலங்களில் வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பறவைகளுக்குத் தீங்கு வராமல் இருந்தால் சரி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x