Published : 26 Aug 2018 09:02 AM
Last Updated : 26 Aug 2018 09:02 AM

உலக மசாலா: குற்றங்களை குறைத்த புத்தர் சிலை

அமெரிக்காவில் உள்ள ஓக்லாந்து நகரில் மதச்சார்பற்ற ஒருவர், அந்தப் பகுதியைச் சுற்றிலும் நடைபெற்று வந்த குற்றங்களை வெகுவாகக் குறைத்திருக்கிறார்! இதற்காக அவர் செய்தது, கடையிலிருந்து ஒரு புத்தர் சிலையை வாங்கி வைத்ததுதான். ஓக்லாந்தின் பதினோராவது அவென்யூ மற்ற இடங்களை விட வன்முறைகள் அதிகம் நடைபெறும் இடமாகக் கருதப்பட்டது. இங்கே சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருள் கடத்தல், கொள்ளை, திருட்டு போன்ற செயல்கள் நடைபெற்று வந்தன. இதே பகுதியில் வசிக்கும் டான் ஸ்டீவன்சன் ஒரு நாள், 60 செ.மீ. உயரம் உள்ள புத்தர் சிலையை வாங்கி வந்தார். தன் வீட்டின் எதிரே உள்ள மரத்தடியில் வைத்துவிட்டார். அதுவரை அங்கே தேவையற்ற பொருட்கள், குப்பைகளைத் தூக்கி வீசிக்கொண்டிருந்தவர்கள், சட்டென்று தங்கள் செயல்களை நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் புத்தர் இருந்த இடத்தை தினமும் தாங்களாகவே சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதைப் பார்த்து சிலர், இன்னும் சில புத்தர் சிலைகளை வாங்கி அங்கே வைத்தனர். இந்தப் பகுதியில் வசிக்கும் வியட்நாமைச் சேர்ந்த மக்கள், புத்தருக்கு பழங்கள், இனிப்புகளை வைக்க ஆரம்பித்தனர். சிலர் மலர்களால் அலங்காரம் செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் வசித்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள், திருடர்கள், குடிகாரர்கள் எல்லாம் வேறு இடங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

“குப்பைகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சிலை வைக்கும் யோசனை வந்தது. இயேசுவுக்கு எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள். அதனால் நடுநிலையாளரான, யாராலும் எதிர்க்க முடியாத புத்தர் சிலையை வைக்க எண்ணினேன். அதற்குப் பிறகு நானே எதிர்பார்க்காத அளவுக்கு நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. வினா வோவும் அவரது மகன் குக் வோவும் இந்தச் சிலையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள். நானும் சம்மதித்தேன். விரைவில் இங்கே ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டி முடித்துவிட்டனர். தினமும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வழிபடுகிறார்கள். பாடுகிறார்கள். தியானம் செய்கிறார்கள். 2012 முதல் 2014வரை இந்தப் பகுதியில் 82% குற்றங்கள் குறைந்துவிட்டதாகக் காவல் துறை அறிவித்திருக்கிறது. 14 கொள்ளைச் சம்பவங்களிலிருந்து 3 ஆகக் குறைந்துவிட்டது. 5 கொடூரமான தாக்குதல் சம்பவங்கள், இப்போது பூஜ்ஜியமாக மாறிவிட்டது. போதைப் பொருள் கடத்தல் 3-லிருந்து பூஜ்ஜியமாகவும் திருடு 8-லிருந்து 4 ஆகவும் குறைந்துவிட்டதாகக் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் புத்தர் ஆலயமாக மட்டுமின்றி, இந்த பகுதி மக்கள் சந்திக்கும் இடமாகவும் மாறிவிட்டது. இன்று இந்தப் புத்தர் ஆலயம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இவருக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கெல்லாம் கூட இருக்கிறது!” என்கிறார் டான் ஸ்டீவன்சன்.

அடடா! எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x