Published : 24 Aug 2018 01:55 PM
Last Updated : 24 Aug 2018 01:55 PM

கேரளாவுக்கு மனிதநேய அடிப்படையில் உதவுகிறோம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

 மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மனித நேய அடிப்படையில் உதவுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெய்த பெருமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால், 350-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை குறைந்து, வெள்ளம் வடிந்து தற்போதுதான் கேரளாவில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. கேரளாவின் சூழலைப் பார்த்து பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவியும், நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வருகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனிநபர்களும், நிறுவனங்களும் கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியும், நிதியுதவியும் அளித்து வருகின்றன.

கேரள அரசு மாநிலத்தில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.2200 கோடி நிதியுதவி கோரியநிலையில், மத்திய அரசும் முதல்கட்டமாக கேரளாவுக்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது.

இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் ஏராளமான கேரள மக்கள் பணியாற்றி வருவதால், அந்த மாநில மக்களின் துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் அந்நாட்டு அரசு ரூ.700 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது. கத்தார் நாட்டு அரசும் ரூ.35 கோடி நிதியுதவி அளிப்பதாகத் தெரிவித்தது.

ஆனால், கடந்த 2004-ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எடுத்த முடிவின்படி வெளிநாட்டில் இருந்து நிதியுதவியைப் பெறுவதில்லை என்று கொள்கையை தொடர்ந்து 14 ஆண்டுகளாகப் பின்பற்றுவதாக கூறிய மத்திய அரசு, ஐக்கிய அரபு அமீரக உதவியை நிராகரித்தது.

இந்தச் சூழலில், கேரள மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பாகிஸ்தான் சார்பில் ஆறுதல்களைத் தெரிவிக்கிறோம்.

விரைவில் துயரத்தில் இருந்து மீண்டுவர இறைவனைப் பிரார்த்திக்கிறோம். கேரள மாநிலத்துக்கு மனிதநேய அடிப்படையில் அனைத்து விதமான உதவிகளையும் அளிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கத்தார் நாடு கேரள மாநிலத்துக்காக ஏராளமான நிவாரணப் பொருட்களை கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்துக்கு உதவி செய்வதாக கூறிய ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மாலத்தீவுகள், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x