Published : 22 Aug 2018 10:22 AM
Last Updated : 22 Aug 2018 10:22 AM

உலக மசாலா: அய்யோ… மிகவும் பரிதாபமான கிளப்!

துருக்கியைச் சேர்ந்த மிகச் சிறிய கால்பந்து கிளப் கல்ஸ்போர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கிறது. சமீபத்தில் க்ளப்பின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, தன்னிடம் இருந்த 18 விளையாட்டு வீரர்களை விற்று, 10 ஆடுகளை வாங்கியிருக்கிறது! இந்த ஆடுகளின் மூலம் கிடைக்கும் பால், இறைச்சியை விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் கிளப்புக்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 ‘‘வீரர்களை விற்று, ஆடுகளை வாங்கிய நடவடிக்கையால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டோம். நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு நிதி உதவி செய்வதற்கு விளம்பரதாரர்கள் கிடைப்பதில்லை. அரசாங்கமும் எங்களை ஆதரிப்பதில்லை. அதனால்தான் எங்கள் வீரர்களை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஒரு தொழில் ஆரம்பித்து, பிற்காலத்தில் இந்த கிளப்பில் உள்ள வீர்ர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க முடிவு செய்தோம்.

18 வீரர்களை 1,80,000 ரூபாய்க்கு விற்றோம். இதில் 10 ஆடுகளை வாங்கினோம். பால், இறைச்சி விற்று வருமானம் பார்க்கலாம். ஆடுகள் குட்டி போடும். அதன்மூலம் மந்தையும் பெருகும். வருமானமும் கிடைக்கும். இது வருமானம் கொட்டக் கூடிய தொழில் அல்ல. ஆனாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த 10 ஆடுகளை வைத்து, அடுத்த சில ஆண்டுகளில் 140 ஆடுகளை உருவாக்குவதுதான் எங்கள் குறிக்கோள். இப்போது எங்களுக்குத் தேவை நிலையான வருமானம்தான்” என்கிறார் கிளப்பின் தலைவர் கெனான் பையுக்லெப்லெபி.

 

அய்யோ… மிகவும் பரிதாபமான கிளப்!

 

அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் ஐலாண்ட் பகுதியில் நீர்நிலையை ஒட்டியிருக்கும் பைன் மரக் காடுகளுக்கு அருகில் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த திங்கள் கிழமை காலை 45 வயது காஸ்ஸண்ட்ரா க்ளைன், தன்னுடைய நாயுடன் நடைப்பயிற்சியை மேற்கொண்டார்.

நீர்நிலையில் வசிக்கும் 8 அடி முதலை ஒன்று, நடைபாதைக்கு அருகில் ஒதுங்கியிருந்தது. நாயைக் கண்டதும் பிடித்து இழுத்தது. தன் செல்ல நாயைக் காப்பாற்றுவதற்காக முதலையுடன் போராடினார் க்ளைன். நாயை விட்டுவிட்டு, க்ளைனைப் பிடித்துவிட்ட முதலை, தண்ணீருக்குள் அவரை இழுத்துச் சென்றுவிட்டது.

இந்தக் காட்சியைக் கண்டவர்கள், காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் வந்து, க்ளைனின் உடலைக் கண்டெடுத்தனர்.

“நான் 5 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசிக்கிறேன். இதுவரை முதலைகளைத் தண்ணீரிலும் தண்ணீருக்கு அருகில் உள்ள நிலத்திலும்தான் பார்த்திருக்கிறேன். ஒரு முதலை, மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து, ஒருவரை கொன்றதை இப்போதுதான் பார்க்கிறேன். ஆட்கொல்லி முதலையை இங்கிருந்து உடனடியாக அகற்றிவிட்டனர். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது” என்கிறார் ஸ்மித்.

பாவம், செல்லப் பிராணிக்காக உயிரை விட்டுட்டாரே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x