Published : 21 Aug 2018 08:54 AM
Last Updated : 21 Aug 2018 08:54 AM

உலக மசாலா: விரைவில் குணமடையட்டும் நடோல்ஸ்கி!

போலந்தைச் சேர்ந்த 25 வயது டோமாஸ் நடோல்ஸ்கி, அரிய வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் இவரது வாழ்க்கையே வலியாக மாறிவிட்டதுடன், இவரது உடலும் 12 வயது சிறுவனைப்போல் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. 7 வயதில்தான் இந்தக் குறைபாடு ஏற்பட்டது. ஒவ்வொரு வேளை உணவைச் சாப்பிடும்போதும், வயிற்றில் வலி கடுமையாக இருக்கும். கைகளும் கால் பாதங்களும் அதீதமாக வலிக்கும். இதனால் சாப்பிடுவதையே தவிர்க்க ஆரம்பித்தார். உடல் எடை வேகமாகக் குறைந்தது. விரைவிலேயே எலும்பும் தோலுமாக மாறிப் போனார். எத்தனையோ மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்தனர். ஒருவராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. சிலர் இது மூளை தொடர்பான பிரச்சினையாக இருக்கலாம் என்றார்கள். 16 வயதில்தான் இவரது நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்தனர். மரபணுக் குறைபாட்டால் இந்த நோய் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதற்கு மருத்துவம் இல்லை என்றும் சொன்னார்கள். நோயைக் கண்டறிந்தும் பலன் இல்லாமல் போய்விட்டது.

“நான் 25 வயது இளைஞன். ஆனால் ஒரு சிறுவனைப்போல் இருக்கிறேன். தினமும் கண்ணாடியைப் பார்க்கும்போது வெறுப்பாக இருக்கிறது. ஏனென்றால் கண்ணாடியில் தெரியும் பிம்பம் நான் இல்லை. என் உருவத்தால் பல இடங்களில் பிரச்சினை. நான் இளைஞன் என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. ஒவ்வொரு நாளும் என்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. உணவாகச் சாப்பிட முடியாததால், உடலுக்குத் தேவையான சத்தை வேறு விதங்களில் எடுத்துக்கொள்கிறேன். வலி தெரியாமல் இருக்க, வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகிறேன். மாத்திரைகளைப் போடாவிட்டால், என் உடல் முழுவதுமே பயங்கரமாக வலிக்க ஆரம்பித்துவிடும். போலந்து முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மருத்துவர்களைச் சந்தித்துவிட்டேன். இதுவரை மிகக் குறைந்த அளவிலேயே முன்னேற்றம் வந்திருக்கிறது. ஆனாலும் என்றாவது ஒருநாள், இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவந்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்கிறார் டோமாஸ் நடோல்ஸ்கி.

தற்போது இவரது நோய்க்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை ஒன்று இருப்பதாகவும் அதற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொல்கிறர்கள். அந்த அளவு பணத்தைச் செலவு செய்ய நடோல்ஸ்கியின் குடும்பத்துக்கு வசதி இல்லை. இவரது நிலையைப் பார்த்து ஒருவர் இலவசமாகவே இந்தப் பரிசோதனைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். விரைவில் சரியான மருத்துவம் கொடுக்காவிட்டால், இவர் மெதுவாக மரணத்தை நோக்கிச் சென்றுவிடுவார் என்பதால், பலரும் உதவி செய்வதில் அக்கறை காட்டி வருகிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். நடோல்ஸ்கியின் தம்பியும் 12 வயதில் இதே மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இவர் அளவுக்கு அவருக்கு நோயின் தீவிரம் இல்லை.

 விரைவில் குணமடையட்டும் நடோல்ஸ்கி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x