Last Updated : 20 Aug, 2018 01:05 PM

 

Published : 20 Aug 2018 01:05 PM
Last Updated : 20 Aug 2018 01:05 PM

அதிரடி ‘டிஸ்மிஸ்’ - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை கிண்டல் செய்த ஊழியரை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களைக் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த ஊழியரை உடனடியாக வேலையைவிட்டு தனியார் நிறுவனம் நீக்கியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி. இவர் கேரளாவில் பிறந்தவர் என்றபோதிலும், குறிப்பிட்ட வயதுக்குப்பின் ஓமன் நாட்டுக்குச் சென்று வர்த்தகம் செய்து மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். இவரின் நிறுவனம் லூலு குரூப் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் கொச்சி, எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் இவரின் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.

மழைவெள்ளத்தால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, ரூ.12 கோடி நிதியுதவியை முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், கேரள மாநிலத்துக்குத் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் அரசிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், ஓமன் நாட்டில் லூலு குழுமத்தின் நிறுவனத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் செரு பழயட்டு பணியாற்றிவந்தார். இவர் லூலு குழுமத்தின் நிதித்துறையில் பணியாற்றி வந்தார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி இருப்பதைப் பார்த்து ராகுல் புகைப்படம் வெளியிட்டு பேஸ்புக்கில் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.

இந்தக் கருத்து ஏற்கெனவே மழைவெள்ளத்தில் சிக்கி, உறவுகளையும், சொந்தங்களையும் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு மேலும் வேதனையைத் தருவதாக இருந்தது. இந்தக் கருத்துக்கு ஏராளமான மக்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் ராகுலின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்த லூலு குழும நிறுவனம் அவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓமனில் உள்ள லூலு குழும நிறுவனத்தின் மனிதவள மேலாளர் வெளியிட்ட அறிவிப்பில், “ கேரள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், புண்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்த ராகுல் உடனடியாக நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அவர் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லூலு குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி. நந்தகுமார் கூறுகையில், “கேரள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், அவர்களை நோகடித்த ராகுலை உடனடியாக வேலையில் இருந்து நீக்கியுள்ளோம்.இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்பதை நாங்கள் எங்கள் நடவடிக்கை மூலம் சமூகத்துக்கு சொல்லி இருக்கிறோம். எங்கள் நிறுவனம் எப்போதும் மனிதநேயத்துக்கும், மனிதர்களின் உணர்வுகளுக்கும் தொடர்ந்து மதிப்பளிக்கும்” என கலீஜ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு பின் ராகுல் பேஸ்புக்கில் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளார். “நான் மனம்வருந்தி மன்னிப்பு கோருகிறேன். கேரள மாநிலத்தின் அப்போதைய வெள்ள சூழலை நான் உணரவில்லை. அதன் தீவிரம் தெரியாமல் நான் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டேன். என்னுடைய கருத்து இந்த அளவுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x