Published : 16 Aug 2018 08:34 AM
Last Updated : 16 Aug 2018 08:34 AM

உலக மசாலா: புதிய முகம்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர் கேட்டி. படிப்பிலும் விளையாட்டிலும் திறமையானவர். 16 வயதில் குடும்பம் கெண்டகிக்குக் குடியேறியது. புதிய பள்ளியில் ஒரு மாணவரைப் பார்த்தவுடன் இவருக்குப் பிடித்துவிட்டது. இருவரும் காதலித்தனர். 2014-ம் ஆண்டு கேட்டிக்கு தொடர்ச்சியாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சில அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரத்தில் காதலரின் போனில் இன்னொரு பெண்ணின் குறுஞ்செய்தியைப் படிக்க நேர்ந்தது. உடனே மனம் உடைந்து போனார். வீட்டிலுள்ள குளியலறையில் துப்பாக்கியை முகவாயில் வைத்து, தானே சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள், கேட்டியின் முகம் சிதைந்துபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். உயிர் பிழைத்தாலும் கேட்டியின் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது. மூச்சு விடுவது, சாப்பிடுவது எல்லாம் மிகவும் சிரமமாக இருந்ததால், தொடர்ந்து மருத்துவமனையிலேயே கேட்டி வைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர் அவர் மனதைத் தேற்றி, முகமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தயார் செய்தனர். சில முன்னணி மருத்துவமனைகள் தங்களால் செய்ய இயலாது என்று மறுத்துவிட்டன. இறுதியில் க்ளீவ்லாண்ட் மருத்துவமனையில் முயற்சி செய்யச் சொன்னார்கள். அங்கே முகமாற்று அறுவை சிகிச்சைக்காக பெயரைக் கொடுத்துவிட்டு, காத்திருந்தார் கேட்டி. 2017-ம் ஆண்டு ஆண்ட்ரீயா என்ற 31 வயது பெண் இறந்துபோனார். அவரிடமிருந்து முகத்தை எடுத்து, இவருக்குப் பொருத்தும் முயற்சிகளில் மருத்துவர்கள் இறங்கினர். துப்பாக்கியில் சுட்டு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவிலேயே மிக இளம் வயதில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்ற சிறப்பு கிடைத்திருக்கின்றது. இதற்குப் பிறகு கேட்டி இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தார். உணவை விழுங்கினார். மெதுவாக நடக்கவும் பேசவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பார்வை பறிபோனதால் பிரெய்லி முறையில் படிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.

“இது எனக்குக் கிடைத்த 2-வது வாழ்க்கை. துப்பாக்கியில் சுட்ட பிறகான வாழக்கையில் என் பெற்றோர் சில நிமிடங்கள் கூட என்னை விட்டுப் பிரிந்திருக்கவில்லை. நான் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டனர். எப்போதும் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டே இருந்தனர். இவ்வளவு நல்ல மனிதர்களை விட்டு, இறந்து போக நினைத்தோமே என்று வருத்தமாக இருக்கிறது. என்னுடைய பழைய முகம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் விபத்துக்குப் பிறகான என் முகத்தை நினைக்கும்போது, இந்தப் புதிய முகம் மிகவும் அழகாகத் தெரிகிறது. படிப்பை முடித்த பிறகு, என்னைப்போல் தற்கொலையில் இருந்து தப்பியவர்களுக்காக வேலை செய்யப் போகிறேன். தற்கொலை எண்ணம் வருகிறவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப் போகிறேன்” என்கிறார் கேட்டி.

இவரது கதையை நேஷனல் ஜியோகிரபிக் பத்திரிகை, ‘தி ஸ்டோரி ஆஃப் ஃபேஸ்’ என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x