Published : 11 Aug 2018 12:56 PM
Last Updated : 11 Aug 2018 12:56 PM

துருக்கியின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை இரட்டிப்பாக்கிய அமெரிக்கா: ஈரானுக்கு ஆதரவு அளித்ததற்காக பழிவாங்கல் நடவடிக்கையா?

துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியதிலிருந்து அந்நாட்டின் பணமதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. 

இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளேன்.  நம்முடைய வலுவான டாலருக்கு முன்னால் துருக்கியின் லிரா (லிரா - துருக்கி பணம்)  சரிந்துள்ளது. துருக்கியுடனான நமது உறவு சுமுகமாக இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு குறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில்,  "அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பை துருக்கி கண்டிக்கிறது. அமெரிக்காவின் இந்த முடிவு இரு நாடுகளுக்கிடையே அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவை இது பாதிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, "அயல் நாட்டு சக்திகளின் பிரச்சாரத்தால் துருக்கி பணமதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை துருக்கி கண்டித்தது.

மேலும் ஈரானிடம்  இருந்து  கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்று துருக்கி அமெரிக்காவுக்கு பதிலளித்திருந்தது. இந்த நிலையில் துருக்கி மீது இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது பழிவாங்கல் நடவடிக்கை என்று குரல்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வந்ததுடன் தற்போது அதற்கு ஆதரவளித்த துருக்கி மீது அமெரிக்கா விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x