Published : 11 Aug 2018 12:35 PM
Last Updated : 11 Aug 2018 12:35 PM

அமெரிக்காவில் இப்படியும் விநோதம்: திருடிச் சென்ற விமானம்; நடுவானில் வெடித்துச் சிதறியது

அமெரிக்காவில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை மெக்கானிக் ஒருவர் திருடிச் செல்லும் நோக்குடன் ஓட்டிச் சென்றார். அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியது.

இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றை திருடுபவர்கள் அவற்றை ஒட்டிக் கொண்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடப்பதுண்டு. அமெரிக்காவில் இதுபோல விமானத்தை ஒருவர் திருடியபோது, வெடித்து சிதறிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை அந்த விமானத்தில் மெக்கானிக் ஒருவர், பழுதுபார்க்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாரக்காத வகையில் அந்த விமானத்தை ஆன் செய்து அவர் ஒட்டிச் சென்றார்.

இதனால் விமான நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த விமானம் பறக்கும் பாதை கண்காணிக்கப்பட்டது. மேலும் ராணுவ விமானம் ஒன்று அந்த விமானத்தை விரட்டிச் சென்றது.

ஆனால் அந்த மெக்கானிக், விமானம் ஓட்டி அனுபவம் இல்லாததால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கேட்டறிந்த தகவலைக் கொண்டு மட்டுமே அவர் விமானத்தை ஓட்டியுள்ளார். அந்த விமானம் கடலில் பறப்பதை உறுதி செய்யப்பட்டு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு படகுகளும் விரைந்தன.

ஆனால், அந்த மெக்கானிக் சரியாக ஓட்ட முடியாததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் அந்த மெக்கானிக் உயிரிழந்தார். அதன் பாகங்கள் தீவு ஒன்றில் விழுந்தன. விமான நிலையத்தில் விமானம் திருடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x