Published : 09 Aug 2018 07:27 PM
Last Updated : 09 Aug 2018 07:27 PM

அர்ஜெண்டினாவை சிறுகச் சிறுக விழுங்கும் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்): பாடம் கற்றுக்கொள்ளுமா பிற வளரும் நாடுகள்?

அர்ஜெண்டினாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தாராளவாத அரசின் அதிபர் மவ்ரீசியோ மாக்ரி. இவர் பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எஃப்-இடமிருந்து 50 பில்லியன் டாலர்கள் கடன் கேட்டுள்ளார். ஆனால் இது அந்நாட்டின் மேட்டுக்குடியினருக்குத்தான் போகுமே தவிர இதன் கடன் சுமையை மீதியுள்ள ஏழைமக்களே சுமக்க வேண்டி வரும் என்று பொருளாதார நிபுணர் மைக்கேல் ஹட்சன் தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவில் கடந்த சில மாதங்களாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர், காரணம் தாராளமய பொருளாதார அரசுக் கொள்கையினால் சிக்கனம் என்ற பெயரிலும் செலவினங்களைக் குறைக்கிறோம் என்ற பெயரிலும் பல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதே. இவர் பதவியேற்று 2 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இதுவரை பொதுத்துறை ஊழியர்கள் சுமார் 76,000 பேர் பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எரிவாயு, மின்சாரம், நீர் ஆகியவற்றுக்கான மானியங்களை அகற்றியுள்ளார். இதனால் நாட்டில் விலை உயர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 10 மடங்கு அதிகரித்துள்ளது.

தாரளமய சுருட்டல்வாத பொருளாதாரக் கொள்கையைத்தான் ‘பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள்’ என்ற பெயரில் வளரும் நாடுகளின் ‘பொம்மை’ அரசுகாள் செய்து வருகின்றன. கிரீஸ் பொருளாதாரம் இப்படித்தான் சீரழிந்தது.

இந்திய பொருளாதார நிபுணர்கள் போலவே அங்கும் இதற்குக் காரணமாக அதிகரித்து வரும் பணவீக்கம், நாட்டின் பணமதிப்பு சரிவு உள்ளிட்டவை சுட்டிக்காட்டப்படுகின்றன. மாக்ரிக்கு பன்னாட்டு நிதியத்தின் கடைக்கண் பார்வையும் ஆதரவும் கிட்டியுள்ளது. இதனையடுத்து மாக்ரி கேட்டுள்ள 50 பில்லியன் டாலர்கள் கடன் தொகைக்கு பன்னாட்டு நிதியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதற்குப் பதிலீடாக இன்னும் மக்கள் சார்பு ஷேமநலத்திட்டங்களில் மாக்ரி கையை வைக்க வேண்டும் என்பது நிபந்தனை.

இந்நிலையில் அர்ஜெண்டினாவின் பொருளாதார நிலைமைகளையும் அதனை எதிர்நோக்கும் இருண்ட காலத்தையும் மிசவ்ரி பல்கலைக் கழகத்தின் பொருளாதார பேராசிரியரும், மிகப்பெரிய கல்விமானும் ஆன மைக்கேல் ஹட்சன் கவுன்ட்டர் பஞ்ச் என்ற ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகள் இதோ:

அர்ஜெண்டினாவுக்கு ஏன் இவ்வளவு பெரிய கடன் தேவையிருக்கிறது?

முன்னாள் அதிபர் கிரிஷ்னர் சம்பளத்தை அதிகரித்தார், வேலைவாய்ப்புகளை உருவாக்கினார், அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று இப்போதைய அதிபர் முடிவெடுத்து விட்டார், ஒருவிதத்தில் பொருளாதாரத்தை சுருக்க நடத்தப்படும் வர்க்கப்போர்தான் இது. சம்பளத்தைக் குறைக்க வர்த்தகத்தைக் குறைக்க வேண்டும், இதன் மூலம் வேலைவாய்ப்பையும் குறைக்க வேண்டும். எல்லா ஐ.எம்.எஃப். கடன்களைப் போலவே அதிபரின் சிக்கன நடவடிக்கைக்கு முன்பாகவே அர்ஜெண்டினாவின் பணக்காரர்கள், செல்வந்தர்கள் தங்கள் பணத்தை அயல்நாடுகளுக்குக் கொண்டு செல்ல வழிவகை செய்யப்படுகிறது. பணமதிப்பு முற்றிலும் வீழும் முன்பே இவர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாத்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதுதான் நடக்கும்.

ஐ.எம்.எஃப். கடனால் அர்ஜெண்டினா இன்னும் கடன் சுமையில் ஆழ்த்தப்படும். அதன் பணமதிப்பு இன்னும் கீழே கீழே போய்க்கொண்டுதான் இருக்கும். இதைத்தான் ஐஎம்எப் செய்யும். இதுதான் ஐ.எம்.எஃப்-இன் வணிகத் திட்டமே. மூலதனத்தை அர்ஜெண்டினாவிலிருந்து வெளியேற்றுவதற்கான மானியமே ஐ.எம்.எஃப். கடன் என்பது. பணப்பொருளாதாரத்தை நசுக்கி ஓட்டாண்டியாக்குவதுதான் அதன் காரியம். 50 பில்லியன் டாலர்கள் ஐ.எம்.எஃப். கடன் தொகை செலவழிக்கப்பட்டவுடன் செல்வந்த அர்ஜெண்டீனியர்கள் தங்கள் நாட்டுப் பணமான பெஸோக்களை டாலர்களாக மாற்றிக் கொண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, மே.இ.தீவுகள் என்று பறந்து விடுவார்கள். பிறகு பெஸோ முற்றிலும் வீழ்ந்துவிடும்.

கடந்த 50 ஆண்டுகளாக ஐ.எம்.எஃப் கடன்களின் அடிப்படை முற்கோள் என்னவெனில் பணமதிப்பைக் குறைத்து விட்டால் உண்மையில் உழைப்புக் கூலியும் வீழ்ந்து விடும். கச்சாப்பொருட்களுக்கும் மூலதனத்துக்கும் பன்னாட்டு விலை கிடைக்கும். பணமதிப்பு குறைந்தால் இறக்குமதிகள் கட்டணம் கடுமையாக உயரும். இதனால் மக்களுக்குச் செலவு அதிகரிக்கும். தானியம், உணவுப்பொருள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு தொழிலாள வர்க்கம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய காரணங்களினால் ஐ.எம்.எஃப். கடனை ஒரு போதும் அர்ஜெண்டினாவினால் அடைக்க முடியாது, மீண்டும் 2001-ல் இருந்த அதே நெருக்கடி திரும்பும்.

இந்த கடன் மிகவும் தீமையான கடனாகும், அர்ஜெண்டினா ஒருகாலத்திலும் திருப்பி செலுத்த முடியாது. பொம்மை அரசாங்கத்தை ஆதரிக்க நிறுவி நிரந்தரமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதிர்ப்பாளர்களையும், தொழிலாளர் தலைவர்களையும் படுகொலைகள் செய்ய அமெரிக்கா ஏகப்பட்ட நிதியுதவிகளைச் செய்துள்ளது. கடன் வாங்கி விட்டால் அமெரிக்க விதிமுறைகளைத்தான் கடைபிடிக்க வேண்டும், அர்ஜெண்டினா விதிமுறைகளை அல்ல. ஒருநாட்டில் இருக்கும் பணத்தையும், செல்வத்தையும் அந்நாட்டிலிருந்து விரட்டியடித்து பணமுள்ளவர்கள் ஏகப்பட்ட டாலர்களுடன் அயல்நாட்டிற்குச் செல்ல வழிவகுப்பதே ஐ.எம்.எஃப்.

அர்ஜெண்டினா மட்டுமல்ல வளரும் நாடுகள் என்னதான் செய்ய வேண்டும்?

அமெரிக்கா தன் வட்டிவிகிதங்களை அதிகரித்தால், அயல்நாட்டு பணம் அமெரிக்க டாலர்களுக்குள் ஓடிவரும். ஏனெனில் உலகில் மற்ற நாடுகள், ஐரோப்பா ஆகியவை வட்டி விகிதத்தை குறைவாகவே வைத்துள்ளது. எனவே உலகப் பணங்கள் டாலர்களுக்குள் வரும்போது டாலர் மதிப்பு கூடும். அதனால்தான் அர்ஜெண்டினா மட்டுமல்ல பிற வளரும் நாடுகளும், மூன்றாம் உலக நாடுகளும் டாலர்களை வாங்க தங்கள் நாட்டுப் பணத்தை அதிகம் செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் அயல்நாட்டுக் கடன்களை வளரும் நாடுகள் அடைக்க முடியும்.

அர்ஜெண்டினாவும் பிற வளரும் நாடுகளும் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவெனில் அவர்களால் அச்சடிக்க முடியாத ஒரு நாட்டின் பணத்தில் ஏன் இவ்வளவு கடன்களை வைத்திருக்க வேண்டும் என்பதே. அதிகமாகத் தங்கள் நாட்டுப் பணத்தைச் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, இதன் விளைவாக அர்ஜெண்டினா கடன் பத்திரங்கள், சிலே பத்திரங்கள், ஆப்பிரிக்க பத்திரங்கள் மூன்றாம் உலக கடன் பத்திரங்கள் வீழ்ச்சியடைகின்றன. காரணம் இந்த நாடுகளால் கடனைச் செலுத்த முடியாது என்று முதலீட்டாளர்கள் புரிந்து கொள்கின்றனர். எனவே இந்த விளையாட்டு முடிந்து விட்டது என்றே கருதுகிறேன். ஒன்று வேண்டுமானால் செய்யலாம் கடனில் மூழ்கியுள்ள 3ம் உலக நாடுகள் கடன்களை தங்கள் நாட்டு பணமதிப்பின்படி மறுமதிப்பீடு செய்து அதன்படித்தான் கொடுப்போம் என்று போர்க்கொடு தூக்க வேண்டும். பன்னாட்டு மாநாடு ஒன்று நடத்தி ‘உண்மையில் எவ்வளவு தொகைக் கொடுக்க வேண்டும்’ என்று கடன் உரிமைச் சலுகை அறிவிக்க வேண்டும்.

எந்த நாடும் தங்கள் நாட்டுப் பொருளாதார ஆதாரங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது. தங்கள் நாட்டு வேலைவாய்ப்புகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தங்கள் சுதந்திரத்தை அடகு வைத்து அயல்நாட்டு கடனாளர்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. அனைத்து நாடுகளுக்கும் தங்கள் நாட்டு குடிமக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உரிமை உள்ளது. என் பொருளாதாரம்தான் எனக்கு முக்கியம் என்ற கொள்கைகீழை நாடுகளுக்கு அவசியம். குறிப்பாக கடன் வாங்குவது பாசாங்கான காரணங்களுக்காக இருக்கக் கூடாது. உதாரணமாக ஐ.எம்.எஃப். கடன் பணமதிப்பை நிலைப்படுத்தும் ஒழுங்கு படுத்தும் என்பது பொய்யான காரணமே, மாறாக மூலதனத்தை நாட்டை விட்டு வெளியே அனுப்புதல் அல்லது கறப்பது என்பதில் முடிந்து நாட்டை ஓட்டாண்டியாக்கி விடும்போது மூன்றாம் உலக நாடுகள் தங்கள் நாட்டு நலனில் அக்கறை காட்டினால் இதன் காட்டுப்பிடியிலிருந்து தப்ப வழியுண்டு.

இவ்வாறு எச்சரித்துள்ள பொருளாதார அறிஞர் ஹட்சன், நிலைமைகள் இன்னும் மோசமாகத்தான் போகும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x