Published : 06 Aug 2018 03:26 PM
Last Updated : 06 Aug 2018 03:26 PM

பாலஸ்தீனத்தில் நடப்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டும்: சிறுமி அஹித் தமீமி

பாலஸ்தீனத்தில் நடப்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அஹித் தமிமீ தெரிவித்துள்ளார்.

நில ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன  எல்லையில் இஸ்ரேல் வீரர்களின் அட்டூழியங்களை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மக்களின் பல ஆண்டுகாலப் போராட்டம் உலக நாடுகளிடம் பெரிதான தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில், 17 வயது சிறுமியான அஹித் தமீம் தனது போராட்டத்தின் மூலம் உலக நாடுகளைப் பாலஸ்தீனம் மீது கூடுதலான பார்வை விழும்படி செய்தார்.

2012 முதல் 2016 தமிம் இஸ்ரேலை எதிர்த்தும், இஸ்ரேலிய ராணுவத்தினரை எதிர்த்தும் தொடர்ந்து தனது குடும்பத்தாருடன் இணைந்து போராடி வருகிறார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோக்கள்  இணையத்தில் பிரபலமாகின.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமீமின் கிராமமான நபி சாலிபில் இஸ்ரேலிய அரசு தனது குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமீம் இஸ்ரேல் வீரரைக் கன்னத்தில் அறைந்து தாக்கிய வீடியோ ஒன்று வெளியானது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஹித் தமீமிக்கு 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் விடுதலைக்குப் பின்னர் தனியார் நிறுவனத்தின் சிறப்பு  நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் அஹித் தமீமி பேசும்போது,  "நான் விடுதலைக்காக என்னைப் போராட்டக்காராகவே நினைத்துக் கொள்கிறேன்.  நான் எப்போதும் இஸ்ரேலால் பாதிக்கப்பட்டவளாக இருக்க மாட்டேன். எனக்கு சிறையில் கிடைத்த அனுபவம் மிகவும் கடினமானது. என்னால் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சிறையிலிருக்கும்போது என்னைப் பற்றிய செய்திகள் எதையும் நான் பார்க்கவில்லை. ஆனால் எனது பெற்றோர்கள் எனக்கு நிறைய பேர் ஆதரவு அளித்து வருவதாகக் கூறினார்கள்.

 

பல இளம் பெண்கள் எனக்கு ஆதரவாக  நீதிமன்றம் வந்திருந்தார்கள்.  நான் சிறையில் சர்வதேச சட்டங்கள் குறித்து படித்தேன்.  ஒரு நாள் நிச்சயமாக இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனது நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். விடுதலைக்குப் பின் கையில் விலங்கு இல்லாமல் வானத்தை என்னால் பார்க்க முடிகிறது. வீதிகளில் நடக்க முடிகிறது.  நட்சத்திரங்களையும், நிலவையும் என்னால் பார்க்க முடிகிறது. அவற்றை நீண்ட நாட்களாக நான்  பார்க்கவில்லை.

நான் தற்போது பாலஸ்தீனம் அனுபவிக்கும் துன்பங்களின் அடையாளமாக இருக்கிறேன். இது எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாலஸ்தீனத்தில் நடப்பதை உலகம் அறிந்துகொள்ள  வேண்டும். பாலஸ்தீனத்தின் குரலை உலக நாடுகளுக்கிடையே கொண்டு செல்வேன். இதில் எனக்கு எந்த துன்பமும் இல்லை. இது மிகப் பெரிய கடமைதான். எனினும் அதை நோக்கித்தான் என்  பயணம் இருக்கிறது” என்றார்

இதுவரை 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறுவர், சிறுமிகள்ாஇ இஸ்ரேல் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x