Published : 04 Aug 2018 08:33 AM
Last Updated : 04 Aug 2018 08:33 AM

உலக மசாலா: இப்படிச் செய்யலாமா?

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்தார் இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயது ஆஜ் இ டகுவாட்டாஸ். அவர் திரும்பிச் செல்லும்போது குடியேற்ற அதிகாரி அபராதம் விதித்தார். ரூ. 2.75 லட்சம் அபராதம் என்றவுடன் கோபமானார். “அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி 150 நாட்கள் பாலியில் தங்கியிருந்ததால், இந்தத் தொகையைச் செலுத்தினால்தான் செல்ல முடியும்” என்றார் அந்த அதிகாரி. சிங்கப்பூர் செல்வதற்கான விமானத்தைத் தவற விட்டுவிடுவோமே என்ற பதற்றத்தில் இருந்த ஆஜ், வாக்குவாதத்தில் இறங்கினார். ஒருகட்டத்தில் மேஜையில் இருந்த பாஸ்போர்ட்டை எடுக்க முயன்றார். அதிகாரி அதைக் கையில் எடுத்துக்கொண்டார். உடனே யோசிக்காமல் அறைந்துவிட்டார் ஆஜ். அதற்குப் பிறகும் அந்த அதிகாரி மிகவும் பொறுமையாகவே நடந்துகொண்டார். “நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்திருக்கிறோம். அவர் விமானத்தைத் தவற விட்டதற்கு நாங்கள் காரணம் இல்லை. கடைசி நேரத்தில் வந்து, பிரச்சினை செய்தால் அபராதம் இன்றி அனுப்ப முடியுமா?” என்று கேட்கிறார் குடியேற்றத் தலைமை அதிகாரி ராய் ஏரிஸ் அம்ரன். 

இப்படிச் செய்யலாமா?

சீனாவின் சாங்ஸோவ் பகுதியில் வசிக்கும் 2 வயது குழந்தை, ‘சூப்பர் கேர்ள்’ என்று அழைக்கப்படுகிறாள். குழந்தையின் பெற்றோர் வேலைக்குச் செல்வதால், பாட்டியின் பராமரிப்பில்தான் பகல் முழுவதும் இருப்பாள். பாட்டிக்கு அவசரமாக மளிகைக் கடைக்குப் போக வேண்டியிருந்தது. குழந்தை தூங்கிய நேரத்தில், வீட்டைப் பூட்டிவிட்டு மளிகை கடைக்குச் சென்றார். சில நிமிடங்களில் கண் விழித்த குழந்தை, பாட்டியைத் தேடியிருக்கிறாள். பின்னர், அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு, அதிலிருந்து கம்ப்யூட்டர் மேஜை மீது ஏறியிருக்கிறாள். அருகிலிருந்த கம்பி இல்லாத ஜன்னலைத் தானே திறந்து எட்டிப் பார்த்திருக்கிறாள். திடீரென்று நிலை தடுமாறி, 17-வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள். குழந்தை விழுவதற்கு முன்பே கடையில் இருந்து திரும்பிய பாட்டி வீட்டைத் திறந்து பார்த்தபோது, குழந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜன்னல் திறந்திருந்ததால் பயந்து போய் எட்டிப் பார்த்தார். கீழே மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு ஓடினார். அங்கே குழந்தை லேசான சிராய்ப்புகளுடன் குடியிருப்புவாசிகளோடு அமர்ந்திருந்தாள். 17-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயத்தை எல்லோரும் பாட்டியிடம் கூறிக்கொண்டிருந்தனர். உடனே குழந்தையின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார் பாட்டி. மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை முழுவதுமாகப் பரிசோதித்த மருத்துவர்கள், மூளையிலோ உடலின் வேறு பகுதியிலோ காயம் ஒன்றும் இல்லை என்றும் வயிற்றுப் பகுதியில் மட்டும் எளிதில் சரிபடுத்தக் கூடிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். குழந்தை விழுந்த பகுதியில் அடர்த்தியான இலைகள் கொண்ட மரம் ஒன்று இருந்ததாலும் முதல் நாள் இரவு பெய்த மழையில் மண் மென்மையாக இருந்ததாலும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும், இது ஆச்சரியமான நிகழ்வுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மிராக்கிள் பேபி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x