Published : 03 Aug 2018 08:28 AM
Last Updated : 03 Aug 2018 08:28 AM

உலக மசாலா: சிக்கனத்துக்கும் ஓர் அளவில்லையா? 

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஒருவர் தன்னுடைய காரைச் சுத்தம் செய்வதற்குச் செலவாகும் என்பதால், குறைவான நீர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் காரைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். திடீரென்று மேல் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நீர்வரத்து அதிகமானவுடன் பயந்து போன அவர், எதிர்ப்புறம் உள்ள சற்று மேடான பகுதியில் ஒதுங்கி நின்றார். அருகில் இருந்தவர்கள் இந்தக் காட்சியைக் கண்டதும் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்தனர். மீட்புப் படையினர் வந்து, அந்த மனிதரைப் பத்திரமாக மீட்டு, கரையில் சேர்த்தனர். "காரைச் சுத்தம் செய்வதற்கு 200 ரூபாய் செலவாகிறது. அதை மிச்சம் பிடிப்பதற்காக இந்த ஆற்றில் காரை இறக்கினேன். திடீரென்று அணையிலிருந்து தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. எப்படி உயிர் தப்பிக்கப் போகிறோம் என்று பயமாக இருந்தது. நல்லவேளை அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்து, என்னைப் பத்திரமாக மீட்டுவிட்டனர். என் கார் அவ்வளவுதானா என்று வருத்தத்துடன் நின்றுகொண்டிருந்தேன். மீட்புக் குழுவினர் மிகவும் சிரமப்பட்டு, நீரை எதிர்த்துப் போராடி, காரையும் மீட்டுக் கொடுத்துவிட்டனர். அணை திறக்க இருக்கிறார்கள், யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்ற அறிவிப்பை நான் கவனிக்காததால், இவ்வளவு பிரச்சினையாகிவிட்டது. என்னையும் என் காரையும் பத்திரமாக மீட்டவர்களுக்கு நன்றி" என்கிறார் இந்த மனிதர்.

சிக்கனத்துக்கும் ஓர் அளவில்லையா? 

சமீபக் காலமாக ஜப்பானியர்கள் பாசிகளை வீட்டில் வளர்க்கிறார்கள். பாசிகளைப் பார்ப்பதற்காகவே இயற்கை சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள். பொதுவாகவே தாவரங்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் ஜப்பானியர்கள். செடி வளர்க்கும் தொட்டிகளில் கற்களுக்குப் பதிலாக, பாசிகளை வளர்க்கிறார்கள். தங்கள் வீடுகளில் பாசி வளர்ப்பதை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக நினைக்கிறார்கள். வீட்டைப் பாசியால் அலங்காரம் செய்து கொடுப்பதற்கு நிறுவனங்களும் இருக்கின்றன. கள்ளி, போன்சாய் மரங்களை வளர்ப்பதுபோல் பாசி வளர்ப்பிலும் இறங்கியிருக்கிறார்கள். பாசி வளர்ப்புக்கு அதிகக் கவனமும் தண்ணீரும் தேவை இல்லை என்பதால், பராமரிப்பதும் எளிது. 500 வகை பாசிகள் இதுவரை இங்கே கண்டறியப்பட்டிருக்கின்றன. "எனக்கும் பாசிக்குமான தொடர்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. பாசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளையும் செய்திருக்கிறேன். ஒருமுறை என் தோழியோடு காளான் பறிக்கச் சென்றபோதுதான் பாசி எனக்கு அறிமுகமானது. அதன் பிறகு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன். பாசி தொடர்பாகப் பல்வேறு தொழில்களிலும் இறங்கியிருக்கிறேன். பாசி மூலம் ஆண்டுக்குச் சுமார் 1.84 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன். என்னைப் ‘பாசிகளின் ராஜா' என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள்” என்கிறார் 64 வயது ஓச்சி கியோமுரா. 2011-ம் ஆண்டு பாசி பற்றிய ஒரு புத்தகம் ஹிசாகோ ஃபூஜி என்பவரால் எழுதி, வெளியிடப்பட்டது. இது தற்போது அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது.

பாசி வளர்ப்பு எனும் புதுத் தொழில்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x