Published : 29 Jul 2018 09:01 AM
Last Updated : 29 Jul 2018 09:01 AM

உலக மசாலா: 3 ஆண்டுகளாக விவாகரத்துக்கு காத்திருக்கும் பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக விவாகரத்து கேட்டுப் போராடி வருகிறார். ஆனால் அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது. 68 வயது டீனி ஓவன்ஸ், 80 வயது ஹக் ஓவன்ஸை விவாகரத்து செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். 40 ஆண்டு கால மண வாழ்க்கையில், பிரிவதற்கான நியாயமான காரணம் எதையும் டீனி குறிப்பிடவில்லை என்பதால், விவாகரத்து வழங்க இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மேல் முறையீடுக்குச் சென்றார். ஹக் ஓவன்ஸ் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாலும் இந்தத் தள்ளாத வயதிலும் மனைவி ஒருநாள் திரும்பி வருவார் என்று காத்திருப்பதாலும் டீனிக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

"என்னுடைய நாற்பதாண்டு வாழ்க்கை அலுத்துவிட்டது. குடும்பத்தை விட வேலை மீதுதான் அதிக அக்கறை காட்டினார். வீட்டில் இருக்கும் நேரம் சிரித்துக் கூடப் பேச மாட்டார். பேசினால் அது விவாதமாகி, விவகாரமாகிவிடும். மற்றவர்கள் முன்பு ஒரு மாதிரியாகவும் தனிப்பட்ட முறையில் ஒரு மாதிரியாகவும் நடந்துகொள்வார். விவாகரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஒவ்வொரு செயலும் செய்துகொண்டிருந்தார். இதனால் என் மண வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியே இல்லாமல் கழிந்திருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக என் கணவரை விட்டுப் பிரிந்து, இன்னொரு மனிதருடன் வாழ்ந்து வருகிறேன். இனி அவருடன் சேரும் எண்ணம் இல்லை. ஆனால் நீதிமன்றம், என் விருப்பத்தை  ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது” என்கிறார் டீனி.

“என் மனைவி மீது எந்தக் குற்றமும் நான் சுமத்த விரும்பவில்லை. அவரிடம் நான் மோசமாக ஒருபோதும் நடந்துகொண்டதில்லை. அவரது மனம் மாறும், நிச்சயம் ஒரு நாள் என்னிடம் திரும்பி வருவார். அதனால் நான் விவாகரத்தை நிராகரிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று நீதிமன்றத்திடம் கூறினார் ஹக் ஓவன்ஸ்.

‘இந்த வழக்கு எங்களை மிகவும் பாதித்துவிட்டது. சட்டத்தை மாற்றுவது நீதிபதிகளின் வேலை அல்ல. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்ற காரணம் மட்டும் விவாகரத்துக்குப் போதுமானதல்ல. விவாகரத்துக்கான வலுவான காரணத்தையோ அல்லது ஆதாரத்தையோ டீனியால் கொடுக்க முடியவில்லை. டீனிக்காக ஒரு முதியவரின் எதிர்பார்ப்பை எங்களால் நிராகரிக்க முடியவில்லை. இங்கிலாந்து விவாகரத்துச் சட்டப்படி, கணவனும் மனைவியும் 5 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தால்தான், காரணம் இல்லாமல் கூட விவாகரத்து அளிக்க முடியும்.   2020-ம் ஆண்டில் டீனி வழக்கு தொடுத்தால் விவாகரத்து வழங்கலாம்’ என்று உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கருத்து தெரிவித்து, வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்.

பல நாடுகளிலும் இன்று விவாகரத்து எளிதாகியிருக்கும் சூழலில், இங்கிலாந்தில் இப்படி ஒரு நடைமுறை இருப்பது விநோதமாக இருக்கிறது. இந்த வயதில் டீனியை இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்கிறார்கள்.

சேர்வதும் பிரிவதும் தனிப்பட்டவர்களின் விருப்பம் அல்லவா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x