Published : 28 Jul 2018 08:45 AM
Last Updated : 28 Jul 2018 08:45 AM

உலக மசாலா: உள்ளம் கொள்ளை கொண்ட நைஜீரிய தேவதை!

உலகின் மிக அழகான குழந்தை என்று கொண்டாடப்படுகிறாள் நைஜீரியாவைச் சேர்ந்த 5 வயது ஜேர். இவளது 3 படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு, உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. "ஜேருக்கு என்று சிறப்பாக எந்த விஷயத்தையும் செய்யவில்லை. பெரிய கண்களும் பளபளக்கும் தோலும் அடர்த்தியான முடியுமாக இயற்கையிலேயே அழகாக இருக்கிறாள். இவளது படங்களைப் பார்ப்பவர்கள் உயிருள்ள குழந்தை என்றே நினைப்பதில்லை. அழகான பொம்மை என்கிறார்கள் அவளைச் சிரிக்க வைக்க பெருமுயற்சி செய்தேன். ஆனால் அவற்றை விட அவள் இயல்பாக இருந்த படங்களே தேவதையாகக் காட்டின. இவளது கண்ணில் ஜீவன் இருக்கிறது” என்று சிலாகிக்கிறார் ஒளிப்படக் கலைஞர் மோஃப் பாமுயிவா.

உள்ளம் கொள்ளை கொண்ட நைஜீரிய தேவதை!

தாய்லாந்தைச் சேர்ந்த டச்சாவிட்டேயின் நண்பர்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மிக ஆரோக்கியமாக இருந்த இவர், திடீரென்று இறந்துவிட்டதாக அவரது மனைவி எழுதியிருந்தார். நூற்றுக்கணக்கானவர்கள் கண்ணீருடன் தங்களது வருத்தத்தைத் தெரிவித்திருந்தனர். கணவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக நிறைய செலவு செய்துவிட்டதால், அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு உதவுமாறு கோரிக்கையும் வைத்தார். இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கும் பரவியது. அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் தொலைபேசியில் பேசி, வங்கியில் பணம் போடச் சொன்னார். மகனை இழந்த துக்கத்திலும் 42 ஆயிரம் ரூபாயைத் திரட்டி வங்கியில் போட்டுவிட்டு, மறுநாள் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளையும் டச்சாவிட்டேயின் அம்மா செய்தார். கிராமத்தில் உறவினர்களும் நண்பர்களும் குழுமியிருந்தனர். ஆனால், உடல் வந்து சேரவில்லை. மருமகளின் தொலைபேசியைத் தொடர்புகொண்ட போது அவர் எடுக்கவே இல்லை. உறவினர் ஒருவர் டச்சாவிட்டேயின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டார். அந்த அழைப்பை இறந்து போனதாகச் சொல்லப்பட்டவரே எடுத்துவிட்டார். வேறு வழியின்றி உயிருடன் இருப்பது தெரிந்துவிட்டது. அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. “என் மகனும் மருமகளும் சேர்ந்து இப்படி எல்லோரையும் பணத்துக்காக ஏமாற்றுவார்கள் என்று நினைக்கவில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். என் மகன் உயிருடன் இருப்பதே போதும்” என்கிறார் டச்சாவிட்டேயின் அம்மா. பலரும் பலவிதங்களில் தங்களை இந்த ஜோடி ஏமாற்றிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருவரும் பிடிபட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3.5 லட்சம் ரூபாய் அபராதமும் சுமார் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.  

ஏமாற்றுவதற்கும் ஓர் அளவில்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x