Published : 26 Jul 2018 08:19 AM
Last Updated : 26 Jul 2018 08:19 AM

உலக மசாலா: உயர்ந்த உள்ளம்!

கலிபோர்னியாவில் வசிக்கிறார் 30 வயது ஜெஸிகா மோரிஸ். சமீபத்தில் முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி இருக்கிறார். பல் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வரும் இவர், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், ‘இந்த ஆண்டு யாராவது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். கலிபோர்னியாவில் இருந்து 2 மணி நேர பயண தூரத்தில் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கிறார் 30 வயது எழுத்தாளர் டேவிட் நச்சேர். இவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ஆறரை ஆண்டுகளாகிவிட்டன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. சிறுநீரக நன்கொடையும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, இறப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரானார் டேவிட். ஆனாலும் ஒரே ஒருமுறை இறுதியாக விளம்பரம் கொடுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அந்த விளம்பரத்தை ஜெஸிகாவும் பார்த்தார். தன்னுடைய புத்தாண்டு உறுதிமொழியைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு வந்துவிட்டதாக உணர்ந்தார். டேவிட்டை தொடர்புகொண்டார்.

“விளம்பரத்தைப் பார்த்து சிலர், சிறுநீரகம் நன்கொடை அளிக்க முன்வந்தனர். ஆனால் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டனர். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். அவர்கள் கேட்டது தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் மருத்துவத்துக்கே அதிகம் செலவு செய்துவிட்டேன். பிறந்த மூன்றாவது மாதத்தில் ஒரு சிறுநீரகம் பழுதடைந்துவிட்டது. அதிலிருந்து 27 தடவை அறுவை சிகிச்சைகள் எனக்கு செய்திருக்கிறார்கள். ஆறரை ஆண்டுகளுக்கு முன்பு  இரண்டாவது சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. டயாலிசிஸ் மூலம்

உயிர் வாழ்ந்து வந்தேன். ஒருகட்டத்தில் மாற்று சிறுநீரகம் பொருத்தாவிட்டால் உயிர் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், முன்பின் அறியாத எனக்கு ஜெஸிகா சிறுநீரகம் நன்கொடை அளிக்க முன்வந்ததில் அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட ஒருவருக்கு, எனக்கு சிறுநீரகம் அளிப்பதன் மூலம் ஏதும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று நினைத்து, வேண்டாம் என்று மறுத்தேன். ஆனால் ஜெஸிகா நான் சொல்வதைக் கேட்கவில்லை. முழு மனத்துடன் நன்கொடை அளிக்க வந்துவிட்டார். இவருக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்கிறார் டேவிட்.

“நான் நன்கொடை அளிக்கிறேன் என்று சொன்னதை டேவிட்டால் நம்ப முடியவில்லை. நான் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய ஆரம்பித்த பிறகே நம்பினார். என்னுடைய சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிம்மதியே வந்தது. வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்ட டேவிட், என்னுடைய சிறுநீரகம் மூலம் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருக்கிறது. இரண்டு மாத ஏற்பாடுகளுக்குப் பிறகு, இருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருவரின் உடல்நிலையும் வேகமாக தேறி வருகிறது. என்னுடைய வாழ்க்கை முழுவதும் டேவிட் நல்ல நண்பராக இருப்பார். அவருக்கு வேறு வாய்ப்பே இல்லை” என்கிறார் ஜெஸிகா.

உயர்ந்த உள்ளம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x