Last Updated : 24 Jul, 2018 03:12 PM

 

Published : 24 Jul 2018 03:12 PM
Last Updated : 24 Jul 2018 03:12 PM

ருவாண்டாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 200 பசுக்களைப் பரிசாக வழங்கிய மோடி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 200 பசுக்களைப் பிரதமர் மோடி இன்று பரிசாக வழங்கினார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 5 நாள் பயணம் மேற்கொண்டார். முதல் நாளாக நேற்று கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகச்சிறிய நாயான ருவாண்டாவுக்கு மோடி சென்றார்.

ருவாண்டா நாட்டுக்குச் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை பிரமதர் மோடி பெற்றார்.

ருவாண்டாவுக்குச் சென்ற மோடிக்கு அந்நாட்டுச் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ருவாண்டா அரசு அந்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக கிரிங்கா சமூக பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த கிரிங்கா திட்டத்தின் படி ஏழைக் குடும்பத்துக்கு ஒரு பசு மாடு அரசு சார்பில் வழங்கப்படும். அந்தப் பசு மாடு கன்று போடும்போது, அந்தக் கன்றை அண்டை வீட்டாருக்குக் கொடுத்து, பரஸ்பரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது திட்டமாகும். இந்தத் திட்டத்துக்காக இந்தியா சார்பில் பிரதமர் மோடி 200 பசு மாடுகளை ருவாண்டா நாட்டுக்கு அன்பளிப்பாக இன்று வழங்கினார்.

இதற்காக ருவாண்டாவில் உள்ள வெரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன்படி 200 பசு மாடுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், ''ருவாண்டாவின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அந்நாட்டுக்கு 200 பசுமாடுகளை அன்பளிப்பாக வழங்கினார். கிரிங்கா திட்டத்தை ருவாண்டாவில் உள்ள வெரு கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.

ருவண்டா அரசின் கிரிங்கா திட்டம் என்பது, ஏழை மக்கள் சத்துள்ள உணவுகளைப் பெற வேண்டும், நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை அந்நாட்டு அதிபர் பால் காகமே நேரடியாக கண்காணித்து வருகிறார்.

முன்னதாக ருவாண்டா நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, கடந்த 1994-ம் ஆண்டு ஹது அரசின் கீழ் 10 லட்சம் துத்சிஸ் இன மக்கள் கொல்லப்பட்ட கிகாலி இனஒழிப்பு நினைவு சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் ருவாண்டா அதிபர் பால் காகமேவை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு நாடுகள் நட்புறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வேளாண்மை, பால் உற்பத்தி, வர்த்தகம், தோல் தொழில் அதுசார்ந்த தொழில் உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

மேலும், ருவாண்டாவில் இந்தியா தூதரத்தை விரைவில் தொடங்கும், ருவாண்டாவுடன் அதிகமான நட்புறவை வளர்க்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x