Published : 24 Jul 2018 08:41 AM
Last Updated : 24 Jul 2018 08:41 AM

தீவிரவாதிகள் தாக்குதல் அச்சம்: பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்ற தேர்தல்; பாதுகாப்புக்கு 3.70 லட்சம் வீரர்கள் குவிப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. பாது காப்புக்காக 3.7 லட்சம் வீரர்களை ராணுவம் குவித்துள்ளது. எனினும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி நீக்கப்பட்டார். தற்போது இடைக்கால அரசு பொறுப்பில் உள்ளது. இந்நிலையில், நாடாளு மன்ற தேர்தல் நாளை நடை பெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிகிறது.

இந்தத் தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கும், முன் னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் வாதியுமான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சிக்கும் இடையில்தான் முக்கிய போட்டி நிலவுகிறது. எனினும், பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதன் கூட்டணி கட்சியான முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமால் கட்சியும் கணிசமானத் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பிடிஐ, இந்தத் தேர்தலில் அதிக தொகுதி களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளது.

ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்போம், சமூக பொருளா தாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்று இம்ரான் கான் தீவிர பிரச்சாரம் செய்துள்ளார். அதற்கு பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

இந்தத் தேர்தலில் 10.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற தொகுதிக்கும், மாகாண தொகுதிக் கும் என 2 வாக்குகளைப் பதிவு செய்வார்கள். பாகிஸ்தானில், சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் பக்துன்கவா ஆகிய 4 மாகாணங் கள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த 4 மாகாணங் களுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் துக்கு 272 உறுப்பினர்கள் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட உள்ள னர். 70 இடங்கள் நியமன உறுப் பினர்களுக்காக ஒதுக்கப்பட் டுள்ளன. எனவே, 272 இடங்களில், 137 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்க தகுதி பெறும். இந்நிலையில், ஆளும் பிஎம்எல்-என் கட்சியினர் பலர் இம்ரான் கட்சிக்கு தாவி யுள்ளனர். பலர் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.

இதன் பின்னணியில் பாகிஸ் தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யும் ராணுவமும் இருப்பதாக நவாஸ் ஷெரீப் கட்சி நிர்வாகி கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் தேர்தல் நியாயமாக நடக்குமா என்பதே கேள்விக் குறிதான் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையில், தேர்தலைச் சீர் குலைக்க தீவிரவாதிகள் தாக்குத லில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 13-ம் தேதி மஸ்துங் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 149 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ராணுவம் குவித்துள்ளது. எனினும், தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை எந்தப் பிரதமரும் 5 ஆண்டு முழுவதும் பதவி வகித்ததில்லை.

சிறையில் நவாஸ் கவலைக்கிடம்

ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழு அவரை ஆய்வு செய்தது. இதயம், சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.

தற்போது அவருக்கு சிறை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் விரைவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று சிறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x