Published : 21 Jul 2018 08:56 AM
Last Updated : 21 Jul 2018 08:56 AM

உலக மசாலா: பயணங்களில் இனி பயமில்லை!

பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பாளர் சிட்ரோயன், புதுமையான கண்ணாடியை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டால், பயணங்களில் ஏற்படும் தலைவலி, வாந்தி போன்ற உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம். வழக்கமான கண்ணாடிகளில் இரண்டு கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதில் நான்கு கண்ணாடிகள் இருக்கின்றன. கண்ணாடிகளைச் சுற்றி, பிளாஸ்டிக் குழாய்களில் நீல வண்ணத் திரவம் நிரப்பப்பட்டிருக்கிறது. பயணம் ஆரம்பித்தவுடன் இந்தக் கண்ணாடியை 10 நிமிடங்கள் அணிந்துகொண்டால் போதும். உடல் பயணத்துக்கு ஏற்றார்போல் தன்னைத் தயார் செய்துகொள்ளும். அதற்குப் பிறகு படிக்கலாம், திரைப்படம் பார்க்கலாம். எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. Seetroen என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கண்ணாடியின் விலை ரூ.7,900. ஆன்லைனில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

பயணங்களில் இனி பயமில்லை!

அமெரிக்காவைச் சேர்ந்த 59 வயது ராபின் கோஸெனும் இங்கிலாந்தைச் ஒரு பெண்ணும் ஆன்லைன் போகர் விளையாட்டு மூலம் அறிமுகமானார்கள். நட்பு, காதலாகவும் மாறியது. திடீரென்று அந்தப் பெண், தன்னை வந்து சந்திக்காவிட்டால், ராபினின் முதலாளிக்குத் தவறான தகவல்களை அனுப்பி வைக்கப் போவதாக மிரட்டினார். காதலி தன்னைச் சந்திக்கும் ஆவலில் இப்படி விளையாட்டாக மிரட்டுவதாக எண்ணினார். வேலையை விட்டுவிட்டு, கையில் இருந்த சேமிப்புடன் இங்கிலாந்து சென்றார். இருவரும் மிகவும் அன்பாக சில மாதங்கள் வாழ்ந்தனர். வயதான காலத்தில் தனக்கு அருமையான துணை கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்தார் ராபின். திடீரென்று அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. "என்னுடைய போனை எடுத்து யாருக்குப் பேசியிருக்கிறேன் என்று பார்ப்பார். நான் எங்கே சென்றாலும் எங்கே இருக்கிறாய் என்று கேட்பார். நான் ஓர் இடத்தைச் சொன்னால், ஜிபிஎஸ் வேறு ஓர் இடத்தைக் காட்டுகிறதே என்பார். வங்கியில் பணம் போடுவது, எடுப்பதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்பார். நான் அமெரிக்காவில் இருக்கும் இன்னொரு பெண்ணுக்குப் பணம் அனுப்புவதாகச் சண்டை போடுவார். ஒரு கட்டத்தில் அவர் என்னை அடிக்கவும் கடிக்கவும் ஆரம்பித்தார். நான் மிரண்டு போனேன். கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினால், ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்பார். இனி இப்படி நடந்துகொள்ள மாட்டேன் என்பார். தானும் தன்னுடைய பேரக் குழந்தைகளும் என்னை நினைத்து ஏங்குவதாகப் புலம்புவார். அதை நம்பி நானும் வீடு திரும்புவேன். ஆனால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஒருகட்டத்தில் நான் வேலை செய்யும் இடத்துக்கு வந்து உளவு பார்க்க ஆரம்பித்தபோது என்னால் அதைத் தாங்க முடியவில்லை. 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து அறையைப் பூட்டிக்கொள்வேன். ஆனால் பக்கத்து அறையில் இருந்து போன் செய்துகொண்டே இருப்பார். கட்டிலுக்கு அடியிலும் அலமாரியிலும் ஒளிந்திருக்கிறார். இனிமேலும் இங்கே வசிப்பது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தேன். எதையும் எடுத்துக்கொள்ளமால், தங்குவதற்கு இடமும் இல்லாமல் காரிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் ராபின்.

ஐயோ… பாவம்..! 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x