Published : 20 Jul 2018 11:34 AM
Last Updated : 20 Jul 2018 11:34 AM

புதினுக்கு ஆதரவா? - ட்ரம்பை விமர்சித்து டைம்ஸ் வெளியிட்ட அட்டைப் படம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு  இல்லை என்று புதினுக்கு ஆதரவாக கூறிய ட்ரம்பை விமர்சித்து டைம்ஸ் இதழ் அட்டைப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது ட்ரம்ப் வெற்றிபெற ரஷ்ய உளவுத் துறை சமூக வலைதளங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று இருவரிடமும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த குற்றச்சாட்டை அதிபர் புதின் திட்டவட்டமாக மறுத்தார். அதிபர் ட்ரம்ப் கூறியபோது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கான காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதினுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்காவைக் கீழறிக்கிவிட்டது என ஜனநாயக கட்சியினர்  குற்றம்சாட்டி இருந்தனர்.

 புதினுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் நனைந்த  நூடுல்ஸ் போல் நின்றுக் கொண்டிருந்தார் என கலிப்போர்னியாவின் முன்னாள் மேயரும், நடிகருமான அர்னாட்ல்ட் விமர்சித்திருந்தார். மேலும் ட்ரம்ப் - புதின் சந்திப்பை அமெரிக்க ஊடகங்களும் விமர்சித்திருந்தன.

இந்த நிலையில் ஜூலை 30 ஆம் தேதி வெளிவர உள்ள டைம்ஸ் பத்திரிகை இதழின் அட்டை படத்தை டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், புதின், ட்ரம்ப் இருவரின் தோற்றமும் கலந்த வகையில் ஒரு புகைப்படத்தை டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவையும் டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்  முதலில் ட்ரம்ப்பின் உருவம் தோன்றி  பின்னர் புதினாக மாறுகிறது.

மெக்சிகோ அகதிகளின் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயலை கடுமையாக விமர்சித்து அட்டை படத்தை கடந்த மாதம் டைம்ஸ் இதழ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x