Published : 20 Jul 2018 09:16 AM
Last Updated : 20 Jul 2018 09:16 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது ட்ரம்ப் வெற்றிபெற ரஷ்ய உளவுத் துறை சமூக வலைதளங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த திங்கள்கிழமை பின் லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று இருவரிடமும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த குற்றச்சாட்டை அதிபர் புதின் திட்டவட்டமாக மறுத்தார். அதிபர் ட்ரம்ப் கூறியபோது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கான காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.

ட்ரம்பின் கருத்து அமெரிக்கா வில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறையின் தலையீடு இருந்தது உண்மைதான். இதை பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளேன். அமெரிக்காவின் அதிபர் என்ற வகையில் அனைத்து விவகாரங்களுக்கும் நானே பொறுப்பேற்கிறேன். அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறையின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அந்த நாட்டு அதிபர் புதினே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவதாக ஜனநாயக கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x