Published : 20 Jul 2018 09:14 AM
Last Updated : 20 Jul 2018 09:14 AM

உலக மசாலா: சுவாரசியமான காதல்!

நெதர்லாந்தைச் சேர்ந்த 45 வயது மைரி கோர்டனும் 43 வயது ரைஸ் மெக்லெனும் திருமணம் செய்துகொண்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலர் களாக இருந்து, ஒருகட்டத்தில் பிரிந்தவர்கள். பிரியும்போது, 'இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் தனியாக இருந்தால் திருமணம் செய்துகொள்வோம்' என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் சென்றனர். "நாங்கள் இருவரும் பிரிந்த நாள் இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது மீண்டும் சேர்வோம் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை. ஜாலியாகச் சொல்லிவிட்டுப் பிரிந்தோம். ஆனால் அது இன்று நிஜமாகியிருப்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் பிரிந்த பிறகு, இருவருக்கும் வேறு சிலருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் இருவருமே யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருவரும் வேறு வேறு நகரங்களில் வசித்ததால் பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைரி என் நினைவுக்கு வந்தார். அவருடன் பழகிய நாட்கள் இனிமையாக இருந்தன" என்கிறார் ரைஸ். "பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு கடையில் ரைஸின் அம்மாவையும் அக்காவையும் சந்தித்தேன். அவர்களிடமிருந்து தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டேன். ஓரிரு முறை பேசினேன். அடுத்த ஆண்டு ரைஸின் அம்மா புற்றுநோயால் இறந்து போனார். ஆறுதல் கூறுவதற்காக அடிக்கடி பேச ஆரம்பித்தேன். சில மாதங்களில் நண்பர்களாக மாறினோம். இருவரிடமும் மீண்டும் காதல் துளிர்த்தது. ஏற்கெனவே ஒருமுறை முறிந்த காதல் என்பதால், சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது.

வருடங்கள் கடந்தன. திடீரென்று எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு, கால் உடைந்துவிட்டது. அப்போதுதான் என்னைப் பார்க்க அடிக்கடி வந்தார் ரைஸ். இனிமேலும் ஒருவரை விட்டு இன்னொருவரால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தோம். 20 ஆண்டுகளாகி விட்டதே, திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டேன். ஒரு நொடி கூட யோசிக்காமல் சம்மதித்தார். மிகத் தாமதமாகத் திருமணம் செய்துகொண்டாலும் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம்" என்கிறார் மைரி.  

சுவாரசியமான காதல்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாரி பால்மன் வீகன் உணவுப் பழக்கத்தை மேற்கொள்பவர். அவர் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் வீகன் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதைப் பலரும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். "நான் 38 ஆண்டுகளாக வீகன் உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறேன். அன்று முதல் நான் வளர்த்துவரும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் வீகன் உணவுப் பழக்கத்தைக் கொண்டு வந்துவிட்டேன். கடைகளில் விற்கும் செல்லப் பிராணிகளுக்கான உணவுகளைக் கூடக் கொடுப்பதில்லை. வீட்டிலேயே காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறேன். என்னுடைய நாய்களும் பூனைகளும் 18 ஆண்டுகள்வரை ஆரோக்கியமாக வாழ்கின்றன. அதனால் நாய்களுக்கும் பூனைகளுக்கும் நான் எந்தவிதத்திலும் கெடுதலை உண்டாக்கவில்லை, கொடுமைப்படுத்தவில்லை" என்கிறார் ஹாரி பால்மன். கால்நடை மருத்துவர் ரிச்சர்ட் கோவன், "பால்மனின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. விலங்குகளுக்கு வீகன் உணவுப் பழக்கம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அசைவ விலங்குகளைக் கட்டாயத்தின் பேரில் சைவமாக மாற்றுவது, அந்த விலங்கின் இயல்புக்கு எதிரானது" என்கிறார்.

என்ன கொடுமை இது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x