Published : 19 Jul 2018 08:38 AM
Last Updated : 19 Jul 2018 08:38 AM

உலக மசாலா: முயற்சி வெற்றியடையட்டும்!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்பர் டெஸ்ஸியர் ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு பார்வை கிடையாது. பொலிவியாவில் உள்ள Salar de Uyuni, உலகிலேயே மிகப் பெரிய உப்புப் பாலைவனம். இதில் சாதனை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் இவர். ஒரு நாளைக்கு 20 கி.மீ. வீதம் 7 நாட்களில் 140 கி.மீ. தூரம் தனியாக நடந்து செல்கிறார். ஜிபிஎஸ் ஆடியோ உதவியுடன் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். பார்வையற்ற குழந்தை களுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராக இருக்கும் அல்பர், தன்னுடைய பார்வை முற்றிலும் போவதற்குள் ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தர். கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி எடுத்துக்கொண்டார். மாற்றுத்திறனாளிகளாலும் சாதாரண மனிதர்களைப்போல் சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கே, இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவக் குழு ஒன்று, சற்று தொலைவில் இவரைப் பின்தொடர்ந்து செல்கிறது. எதிர்பாராமல் ஆபத்து நேர்ந்தால் மருத்துவக் குழுவினரை இவரால் தொடர்புகொள்ள முடியும். ஜூலை 17 அன்று தன்னுடைய பயணத்தை பொலிவியாவில் தொடங்கி இருக்கிறார். இந்தப் பகுதியில் -3 முதல் 20 டிகிரி செல்சியஸ்வரை வெப்பநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். இதில் சாதாரண மனிதர்கள் பயணம் செய்வதே மிகக் கடினமானது. பார்வையற்ற ஒருவருக்கு மிக மிக சவாலான பயணம். இந்த உப்புப் பாலைவனத்தை அடைவதற்கு குறுக்கு வழியில் சென்றால் தூரம் குறையும். ஆனால் அல்பர் நீளமான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். லைகா கிராமத்தில் பயணத்தை ஆரம்பித்து, கோல்சானி கிராமத்தில் முடிக்கிறார். தண்ணீர், உணவு, தூங்கும் பை போன்றவற்றுடன் பயணிக்கிறார். தான் உதவி கேட்காதவரை, தன்னை நெருங்கக் கூடாது என்று மருத்துவக் குழுவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்!

விமானத்தில் இருந்து தவறி விழுந்த காஸ்பர் நாய், 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறது. ஜானிஸ் கேவியர்ஸ் தன் நண்பரிடம் காஸ்பரை ஒப்படைத்து, விமானத்தில் ஏற்றிவிடச் சொல்லிவிட்டு, 2 நாட்களுக்கு முன்பே பேருந்தில் கிளம்பிவிட்டார். ஜூன் 29 அன்று சரக்கு விமானத்தில் செல்லப் பிராணிகளுக்கான பகுதியில் காஸ்பர் அடைக்கப்பட்டது. நடுவில் ஒரு நிறுத்தத்தில் விமானம் இறங்கிவிட்டுக் கிளம்பும்போது, நாய் இருந்த கூண்டின் கதவை அடைக்க மறந்துவிட்டனர். விமானம் அடகாமா பாலைவனப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கூண்டைத் திறந்துகொண்டு காஸ்பர் குதித்துவிட்டது.

இந்த விஷயம் விமான ஊழியர்களுக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. விமான நிலையத்தில் காத்திருந்த ஜானிஸ், காஸ்பர் இல்லை என்றதும் அதிர்ச்சியடைந்தார். தன் நண்பர்கள் மூலம் அடகாமா பாலைவனப் பகுதியில் தேடும் முயற்சியில் இறங்கினார். காவல் துறையும் தேட ஆரம்பித்தது. 6 நாட்களுக்குப் பிறகு காஸ்பர் கண்டுபிடிக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டிருக்கிறது. விமானத்திலிருந்து விழுந்து, உயிர் பிழைத்த காஸ்பரை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.

‘மிராகிள் காஸ்பர்!’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x