Published : 17 Jul 2018 04:10 PM
Last Updated : 17 Jul 2018 04:10 PM

பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் புகார்

பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்காவுக்கு எதிராக  சர்வதேச நீதிமன்றத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், "எங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்த  அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் புகார் அளித்திருக்கிறோம். ஈரான் சட்ட ரீதியாக அமெரிக்காவை எதிர்க் கொள்ள உள்ளது” என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதில் அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவால் நீக்கப்பட்டன.

இதனிடையே, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று விமர்சித்து வந்தார். இந்நிலையில்  கடந்த மே மாதத்தில்  இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள் ட்ரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார் ட்ரம்ப். இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா கூறியிருந்தது.

இதற்கு பதிலடியாக, ''அனுபவ முதிர்வு இல்லாதவர்களின் பேச்சு பலனற்றது. தடை விதித்தால் பதில் நடவடிக்கை நிச்சயம்..”என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் சர்வதேச நீதிமன்ற உதவியை ஈரான் நாடியுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x