Published : 10 Jul 2018 07:46 PM
Last Updated : 10 Jul 2018 07:46 PM

15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி?- சிறுவர்களை பாதுகாத்த முன்னாள் பவுத்தத் துறவி; உயிர்வாழ உதவியது என்ன?: புதிய தகவல்கள்

தாய்லாந்தில் உள்ள லாம் துவாங் குகைக்குள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் உயிருடன் மீண்டது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறுவர்களுடன் சென்ற துணைப் பயிற்சியாளர் முன்னாள் பவுத்தத் துறவி என்பதும், அவரின் பல்வேறு பயிற்சிகள் மூலம் சிறுவர்களை சோர்வடையாமல் பார்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அது குறித்த விவரம் வருமாறு.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும்.

தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. ஏராளமான நீர் வீழ்ச்சிகளும், அடர்ந்த காடுகளும் கொண்ட குகையாகும்.

சியாங்ராய் மாநிலத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கால்பந்து அணி கடந்த 23-ம் தேதி இந்தக் குகைக்கு சைக்கிளில் சாகசப்பயணம் சென்றனர். இந்த சிறுவர்களுக்கு உதவியதாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றார்.

ஆனால், இந்தக் குகை குறித்து அதிகம் அறிந்திராத இந்தச் சிறுவர்களும், துணைப் பயிற்சியாளரும் உள்ளே சென்று மாட்டிக்கொண்டனர். இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்து கொண்டது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், சர்வதேச அளவில் நீர்மூழ்கி நீச்சலில் வல்லுனத்துவம் பெற்றவர்கள், பேரிடர்மீட்பில் சிறப்பு வாய்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கி மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்தது.

வெளிநாட்டில் இருந்து வந்த நீச்சல் வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை களத்தில் இறங்கிய 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மீட்புக் குழுவினர் மேலும் 4 சிறுவர்களை மீட்டனர். இந்த நிலையில் இன்று சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்புக்குழு மீட்டனர்.

குகைக்குள் 12 சிறுவர்களும், துணைப்பயிற்சியாளர் எகாபோலும் சிக்கிக்கொண்டபோது, அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்துள்ளது. ஆனால், எந்தவிதமான உணவுகள் இன்றியும், சுத்தமான குடிநீர் இன்றியும், 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வது என்பது மிக மிகக் கடினமாகும். ஆனால், இந்தச் சிறுவர்கள் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் நேராமல் பாதுகாத்தது அந்த துணைப்பயிற்சியாளர் எகாபோலையேச் சாரும் என்கிறார்கள்.

சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த துணைப் பயிற்சியாளர் எக்போல், புத்த மடத்தில் சேர்ந்து புத்த துறவியானார். இதனால், யோகக்கலை, ஆசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை நன்கு கற்றுத் தேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் வைல்ட் போர் கால்பந்து அணியில் துணைப்பயிற்சியாளராகச் சேர்ந்தார்.

சிறுவர்களுடன் மிகவும் ஆபத்தான குகைக்குள் சிக்கிக்கொண்டோம், அதோடு மழையும் சேர்ந்து பெய்கிறது என்பதை அறிந்தவுடன் துணைப்பயிற்சியாளர் எகாபோல் உஷாரானார்.

தங்களிடம் இருக்கும் உணவுகளைச் சிறுவர்களுக்கு கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல் எகாபோல் பார்த்துக்கொண்டார். ஆனால், உணவு தீர்ந்தவுடன், தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

காற்றும், சூரிய ஒளியும் அதிகமாக உள்ளே புகமுடியாத இடத்தில் இருந்ததால், மூச்சுவிடுவதிலும் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால், இவை அனைத்தையும் தான் கற்றுக்கொண்ட தியானம், மூச்சுப்பயிற்சிக் கலை மூலம் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களைப் பாதுகாத்தார்.

தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, சிறுவர்களை பெரும்பகுதிநேரம் அமரவைத்து அவர்களின் சக்தியை செலவழிக்காமல், சோர்வடையாமல் துணைப்பயிற்சியாளர் பாதுகாத்தார். இதனால், சிறுவர்கள் சோர்வடையாமல் 15 நாட்களுக்கு மேலாக உயிர்வாழ முடிந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெட்சாடா சோக்டுராம்சக் இன்று நிருபர்களிடம் கூறுகையில், முதன் முதலில் மீட்கப்பட்ட 4 சிறுவர்கள் உடல்நிலை நன்றாகத் தேறி இப்போது அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட்டு வருகின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட சிறுவர்களில் 4பேருக்கு உடல் நிலை பரிசோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு நுரையீரல் தொற்று லேசாக இருப்பது தெரியவந்துள்ளது.

இன்று மீட்கப்பட்ட 5 பேரின் உடல்நிலையும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. சிறுவர்கள், துணை பயிற்சியாளர் என அனைவருக்கும் உடலில் அதிகமான தாங்கும் சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்துள்ளதே, இத்தனை நாட்கள் அவர்கள் உயிருடன் இருக்கக் காரணமாகும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x