Published : 10 Jul 2018 05:49 PM
Last Updated : 10 Jul 2018 05:49 PM

‘‘ஓவர் டைம் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார்’’ - ட்ரம்ப் மீது ஓட்டுநர் பரபரப்பு புகார்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான சம்பளத்தை தரவில்லை எனக் கூறி அவரது கார் ஓட்டுநர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி வகிக்கும் முன்பு, தொழிலதிபராக இருந்தபோதும், அவரது தனிப்பட்ட கார் ஓட்டுநராக பணியாற்றியவர் நோயல் சின்ரோன் (வயது 59). ட்ரம்பிடம் 20 ஆண்டுகள் தொடர்ந்து கார் ஓட்டுநராக நோயல் பணியாற்றியுள்ளார். ட்ரம்ப் மட்டுமின்றி அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஓட்டுநராக நோயல் இருந்துள்ளார்.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், நோயலை வேலையில் இருந்து அனுப்பி விட்டார். தனக்கு தொடர்ந்து பணி வழங்குமாறு அவர் கோரியுள்ளார். ஆனால் அதனை ட்ரம்ப் ஏற்கவில்லை.

இந்நிலையில் ட்ரம்பிடம் ஓட்டுநராக பணியாற்றியபோது அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் பணியாற்றியதாகவும், அதற்கான சம்பளத்த ட்ரம்ப் தரவில்லை என்றும், தன்னை கடுமையான மனச்சுமைக்கு ஆளாக்கி வேலை வாங்கியதாகவும், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நோயல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘‘ட்ரம்பிடம் ஓட்டுநராக பணியாற்றியபோது, காலை 7 மணி முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்துள்ளேன். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடவும் கூடுதலாக பணியாற்றினேன். அதற்கான சம்பளத்தை பிறகு கணக்கிட்டு தருவதாக கூறினர். ஆனால் அதன்படி கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான சம்பளம் தரவில்லை.

20 ஆண்டுகளில் ட்ரம்ப் தர வேண்டிய தொகை, இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடி 30 லட்சம் ஆகும். இந்த தொகையை வட்டியுடன் அவர் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இதற்கான முழுமையான சான்றுகள் என்னிடம் உள்ளன’’ எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரிக்க போதுமான ஆதாரம் இருப்பதாக கூறி மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x