Last Updated : 10 Jul, 2018 04:39 PM

 

Published : 10 Jul 2018 04:39 PM
Last Updated : 10 Jul 2018 04:39 PM

தாய்லாந்து குகையிலிருந்து மேலும் மூன்று சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்டிருந்த மேலும் மூன்று சிறுவர்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இத்துடன் குகையிலிருந்து 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், '11 வது சிறுவன் குகையிலிருந்து மீட்புப் படையினரால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். என்பதை ராய்ட்டர்ஸ் உறுதிப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளது.

இன்னும் குகையில் சிக்கிக் கொண்டுள்ள மீதமுள்ள ஒரு சிறுவனையும் பயிற்சியாளரையும் இன்றைக்குள் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மீட்புப் பணி குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றிருந்தார்.

இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ள நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்தது.

வெளிநாட்டில் இருந்து வந்த நீச்சல் வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை களத்தில் இறங்கிய 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டு வந்தனர். நேற்று மீட்புக் குழுவினர் மேலும் 4 சிறுவர்களை மீட்டனர்.

இந்த  நிலையில் மூன்று சிறுவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x