Published : 10 Jul 2018 10:51 AM
Last Updated : 10 Jul 2018 10:51 AM

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நடன வீடியோ வெளியிட்டதால் ஈரானில் இளம்பெண் கைது

டெஹ்ரான்

ஈரானில் உள்ளவர் மதே ஹோஜாப்ரி. வயது 18. இவர் தன்னுடைய வீட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடி, அதை வீடியோ எடுத்தார். பின்னர் இன்ஸ்டாகிராமில் அதைபதிவிட்டார். அந்த வீடியோவைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘பாலோ’ செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கையும் ஈரான் போலீஸார் முடக்கி உள்ளனர்.

இவரைப் போலவே இன்ஸ்டாகிராமில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்ட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட மதே ஹோஜாப்ரியும் மற்றவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளனர். அவர்களை கட்டாயப்படுத்தி போலீஸார் வாக்குமூலம் வாங்கி உள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினர்.

வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர் அழுதபடி அளித்த பேட்டிதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறும்போது, ‘‘மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நான் வீடியோவை வெளியிடவில்லை. மற்றவர்கள் அதேபோல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் வீடியோ வெளியிடவில்லை. என்னை இன்ஸ்டாகிராமில் சிலர் பின்தொடர்கின்றனர். அவர்களுக்காக வெளியிடப்பட்டது தான் அந்த வீடியோ’’ என்று தெரிவித்தார்.

இதில் ஹோஜாப்ரியைப் பற்றிய முழு விவரம் தெரியவில்லை. ஆனால், அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவருடைய வீடியோக்களை வேறு பல வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மேற்கத்திய இசைக்கேற்ப, தனது வீட்டில் ஹோஜாப்ரி நடனமாடி வீடியோ எடுத்துள்ளார். ஆனால், முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் துணியை அவர் அணியவில்லை. முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் செல்லும் போது முகத்தை மறைக்கும் துணியை அணிந்து செல்ல வேண்டும். அதை செய்யாததால் ஈரானில் பலர் கைது செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x