Published : 10 Jul 2018 10:42 AM
Last Updated : 10 Jul 2018 10:42 AM

உலக மசாலா: மனித நேயப் பயணம்

ஸ்வீடனைச் சேர்ந்த 25 வயது இசைக் கலைஞர் பெஞ்சமின் லாட்ரா. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்வீடனிலிருந்து இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்குப் பயணத்தை ஆரம்பித்தார். மனித நேயத்தை வளர்ப்பதும் அத்துமீறி நடந்துகொள்ளும் இஸ்ரேல் குறித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதும் இந்தப் பயணத்

தின் நோக்கம். ஒரு சிறிய தள்ளுவண்டியில் தன்னுடைய பொருட்களை வைத்துக் கொண்டு, கால்நடையாகவே கிளம்பினார். புலம் பெயரும் மக்கள் பயணம் செய்யும் பாதைகளிலேயே காடு, மலை, சகதி, வயல், சாலை என்று நடந்து, 4,800 கி.மீ. தூரத்தைக் கடந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியை அடைந்தார். ஆனால் எல்லையில் இருந்த இஸ்ரேல் காவல்படையினர் பெஞ்சமினைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.

“கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்துதான் விழிப்புணர்வு ஊட்டி வந்திருக்கிறேன். என்னை அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நான் எதிர்பார்த்தே இருந்தேன். ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை நடந்தேன். 13 நாடுகளில் என்னுடைய பாதங்களைப் பதித்திருக்கிறேன். விடுதிகளில் வசிக்கவில்லை. மக்கள் வசிக்கும் இடங்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் தங்கிக்கொண்டேன். கடுமையான குளிர், மழை, வெயில் போன்றவற்றைச் சமாளித்தேன். வழியெல்லாம் புலம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தேன். அவர்களின் துயரத்தை நேரடியாகக் கண்டேன். எதுவுமே தங்களிடம் இல்லாவிட்டாலும் கூட முன்பின் அறியாத ஒருவனுக்கு அன்பையும் உணவையும் பரிமாறக்கூடிய நல்ல இதயங்களைச் சந்தித்தேன். பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இஸ்ரேலின் அநியாயமான ஆக்கிரமிப்புக் குறித்து எடுத்துச் சொன்னேன். பலரும் நான் சொல்வதை ஏற்றுக்கொண்டனர். நான் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன எல்லைக்கு வந்ததும், என்னை அறிமுகம் செய்துகொண்டேன். மிகவும் சந்தோஷமாக வரவேற்று, உட்கார வைத்தனர். தொலைபேசியில் யாரிடமோ என்னைப் பற்றி விசாரித்தனர். உடனே அவர்களது

நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. மிகவும் மோசமாகவும் துன்புறுத்தும் விதமாகவும் நடந்துகொண்டனர். யாரோ நான் பாலஸ்தீனக் கொடியைப் பிடித்துக்கொண்டு பிரச்சாரம் செய்ததைத் தவறாக இவர்களுக்குச் சொல்லிவிட்டனர். இஸ்ரேல் பல ஆண்டுகளாகப் போராட்டக்காரர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் உள்ளே

அனுமதிப்பது இல்லை. நான் ஆஸ்திரியாவில் பாலஸ்தீனக் கொடியுடன் நுழைந்தபோதே என்னைப் பிடித்து, இஸ்திரேலிய தூதரகம் முன்நிறுத்திவிட்டனர். அங்கிருந்துதான் இவர்களுக்குத் தகவல் வந்திருக்க வேண்டும். எதை எதிர்த்து இந்தப் பயணத்தை மேற்கொண்டேனோ, அதன் காரணமாகவே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறேன்” என்கிற பெஞ்சமினை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பின்தொடர்கிறார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பாலஸ்தீன அதிபர் மஹ்மத் அப்பாஸ், பெஞ்சமினுக்குக் குடியுரிமையும் ‘மெடல் ஆஃப் மெரிட், என்ற பட்டத்தையும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். ‘‘பாலஸ்தீனத்தை ஆதரித்து இந்த நீண்ட, கடினமான பயணத்தை மேற்கொண்டதன் மூலம் பெஞ்சமின், மனித மனசாட்சியைப் பிரதிபலித்திருக்கிறார்” என்று பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஹனான் அஸ்ராவி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் அனுமதித்திருந்தால்தான் ஆச்சரியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x