Last Updated : 06 Jul, 2018 07:11 PM

 

Published : 06 Jul 2018 07:11 PM
Last Updated : 06 Jul 2018 07:11 PM

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு; பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி(80 லட்சம் பவுண்ட்) அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், நவாஸ் மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் நவாஸ் மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2 மில்லியன் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.

வரும் 25-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பினால், மகள் மரியம், மருமகன் சப்தார் ஆகியோர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் என்பது, பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் பொன்சேகாவின் ஆலோசனையின் பெயரில் உலகில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விஐபிக்கள் தங்கள் நாட்டில் வரிஏய்ப்பு செய்து, ஊழல் செய்து, முறைகேடாகச் சேர்த்த சொத்துகளைப் போலி நிறுவனங்களில் முதலீடு செய்தனர். அந்த முதலீட்டுக்கும், சட்ட ஆலோசனைக்கும் மொசாக் பொன்சேகா நிறுவனம் உதவியது.

இந்த விஷயத்தைச் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கடந்த 2016-ம் ஆண்டு மே 16-ம் தேதி அம்பலப்படுத்தியது. இதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முறைகேடாக தங்கள் நாட்டில் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும், லண்டனில் முடக்கியுள்ளார். லண்டனில் அவென்பீல்ட் ஹவுஸிங் என்ற அடுக்குமாடி வீடும், சொத்துகளும் வாங்கியுள்ளார் என வெளிப்படுத்தியது.

இந்த விவகாரம் வெளியே அம்பலமாகும்போது, பாகிஸ்தானில் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக நவாஷ் ஷெரீப் தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அவரைப் பதவி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். இதைத் தொடர்ந்து லண்டனில் அவென்பீலட் அடுக்குமாடி வீடுகள் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணை நடந்தது.

நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும் நவாஸ் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதால், லண்டனில் அனைவரும் தங்கி இருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அவ்வப்போது நவாஸ் ஷெரீப்பும், அவரின் மகள் மரியமும் லண்டனில் இருந்து ஆஜராகினார்கள்.

இந்த வழக்கின் தீர்ப்பு 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையில் மூடப்பட்ட அறையில் நீதிபதி முகமது பஷீர் 100 பக்கங்களில் உள்ள தீர்ப்பை வாசித்தார்.

அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குறித்து அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் சர்தார் முகமது அப்பாஸி கூறியதாவது:

''பாகிஸ்தானில் முறைகேடாகச் சேர்த்த சொத்துகள் மூலம், லண்டனில் அவென்பீல்ட் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட சொத்துகளை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாங்கியது உறுதியானது. இதையடுத்து அவருக்கு நீதிபதி 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.72 கோடி அபராதமும் (80 லட்சம் பவுண்ட்) விதித்தார். நவாஸ் மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறையும், 20 லட்சம் பவுண்ட்கள் அபராதமும், அவரின் கணவர் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது.

லண்டனில் இருக்கும் அவென்பீல்ட் அடுக்குமாடிவீட்டை பாகிஸ்தான் அரசு கையகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து இந்த அடுக்குமாடி வீட்டில் நவாஸ் ஷெரீப் வசித்து வருகிறார். ஊழலில் ஈடுபட்டு, வரி ஏய்ப்பு செய்துதான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பை நவாஸ் வாங்கினார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தத் தீர்ப்பையடுத்து, நவாஸ் மகள் மரியம், மருமகன் சப்தார் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தனர். இவர்களின் மகன்களும் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர்கள் இருவரும் தலைமறைவுக் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்'' எனத் தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப் மீது மொத்தம் 3 ஊழல் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அதில் ஒரு வழக்கில் மட்டுமே தீர்ப்பு வெளியாகியுள்ளது. இன்னும் இரு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தும் என்பதால், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நீதிமன்ற சாலையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டது.

இந்தத் தீர்ப்பையடுத்து நவாஸ் ஷெரீப், மகள் மரியம் ஆகியோர் பாகிஸ்தான் திரும்பி சிறைத்தண்டனை அனுபவிப்பார்களா என்பது தெரியவில்லை. இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக, நவாஸ்ஷெரீப், மகள் மரியம் சிறைக்குச் சென்றால், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி மக்களின் அனுதாப வாக்குகளைப் பெற முடியும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x