Last Updated : 06 Jul, 2018 08:52 AM

 

Published : 06 Jul 2018 08:52 AM
Last Updated : 06 Jul 2018 08:52 AM

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 1000 இந்தியர்கள் மீட்பு: விமானங்களுக்கு காத்திருப்பு

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் மோசமான வானிலை காரண மாக நேபாள மலைப் பகுதியில் சிக்கியுள்ளனர். இவர்களில் இன்னும் 1000 பேர் மீட்பு விமானங்களுக்கு காத்திருப்பதாக காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.

சீனாவின் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் செல்வதற்கான வருடாந்திர யாத்திரை கடந்த ஜூன் 8-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். இந்த நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 1,500-க்கும் மேற்பட்டோர் நேபாளம், அதையொட்டிய திபெத்திய பகுதியில் சிக்கிக்கொண்டனர். நேபாள்கஞ்ச்-சிமிகோட்-ஹில்சா வழித்தடத்தில் சிக்கியுள்ள இவர்களை மீட்கும் பணியில், நேபாள அரசின் உதவியுடன் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வானிலை சீராகும் நேரத்தில் மீட்புப் பணி நடைபெறுகிறது. இதில் நேற்று முன்தினம் 250-க்கும் மேற்பட்டோர் ஹில்சா வில் இருந்து மீட்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று 143 பக்தர்கள் சிமிகோட்டில் இருந்து மீட்கப்பட்டு நேபாள்கஞ்ச் அழைத்து வரப்பட்டனர். இந்தப் பணியில் 10 வர்த்தக விமானங்கள் ஈடுபட்டன.

சிமிகோட்டில் 643 பேரும் ஹில்சாவில் 350 பேர் மீட்பு நடவடிக்கைக்காக காத்திருப்பதாக இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.

எச்சரிக்கை

இதனிடையே இந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு திட்டமிடுவோருக்கு காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் மீண்டும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதில், “நேபாளத்தில் உள்ள சிமிகோட் மற்றும் ஹில்சாவில் மருத்துவ சிகிச்சை, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. எனவே யாத்திரை புறப்படும் முன் அவசியம் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிமிகோட் மற்றும் ஹில்சாவுக்கு சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமே செல்ல முடியும். சாதகமான வானிலை இருந்தால் மட்டுமே இவை இயக்கப்படும். இங்கு செல்வதற்கான சாலை வழி மிகவும் ஆபத்தானது. யாத்திரை புறப்படும் முன் இவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x