Published : 30 Jun 2018 07:26 PM
Last Updated : 30 Jun 2018 07:26 PM

அமெரிக்காவில் சாதனை படைக்கும் இந்திய மாணவர்கள்: வெள்ளை மாளிகைக்கு அழைத்து ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘அதிபரின் அறிஞர்கள்’ பட்டத்திற்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் அதிகஅளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ள இந்திய வம்சாவளி மாணவர்களை அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு அழைத்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்காவில் பள்ளி பருவத்திலேயே சிறந்த மாணர்களை கண்டறிந்து ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மட்டுமின்றி அந்தந்த மாகாணங்களிலும் அவர்களை ஊக்குவித்து, வெவ்வேறு துறைகளில் நிபுணர்களாக வளர்ந்தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்க அளவில் மிகச்சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிபரின் திறனாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர். அவர்களை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அமெரிக்க அதிபர்கள் பாராட்டி கவுரவிப்தும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அதிபரின் அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 161 மாணவர்கள் அமெரிக்கா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இதுவரை இல்லாத அளவு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்த அதிபர் ட்ரம்ப், அவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார். பின்னர் அவர்களுக்கு மெடல் வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து ட்ரம்ப் கூறுகையில் ‘‘உங்களின் திறமைகளை நினைத்து நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்க தேசமுமே மகிழ்ச்சி கொள்கிறது. உங்களுக்கு எனது வாழ்த்துகள், மிகச்சிறந்த எதிர்காலம் அமையட்டும்’’ எனக்கூறினார்.

அதிபரால் பாராட்டப்பட்ட இந்திய மாணவர்களில் மிஹிர் படேலும் ஒருவர். சமூகவலைதளங்கள் மூலம் தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் தவறான பிரச்சாரங்கள் செய்யும்போது அவர்களது உருவத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை மிஹிர் படேல் கண்டறிந்துள்ளார். வெர்ஜினியாவில் உள்ள ஜெபர்சன் அறிவியல் தொழில்நுட்ப பள்ளியில் படித்து வரும் அவர் பொறியியல் பட்டபடிப்பை ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் கற்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறுகையில் ‘‘அதிபர் ட்ரம்பை இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்துள்ளேன். அவரை நேரடியாக பார்த்தது உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. அதிபரை சந்திப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. எனக்கு பயமாகவும் அதேசமயம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது’’ எனக்கூறினார்.

புளோரிடாவைச் சேர்ந்த மற்றொரு இந்திய மாணவி காவ்யா.

உயிரி தொழில்நுட்ப பொறியியல் துறை மாணவியான காவ்யா, நீரழிவு ரெட்டினோவை மொபைல் போன் வழியாக 3டி முறையில் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார். ட்ரம்புடனான சந்திப்பு குறித்து அவர் கூறுகையில் ‘‘அதிபர் ட்ரம்பை மட்டுமின்றி, பல பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களை பார்க்கவும், அவர்களுடன் உரையாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி கற்க திட்டமிட்டுள்ளேன்’’ எனக்கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x