Published : 30 Jun 2018 09:32 AM
Last Updated : 30 Jun 2018 09:32 AM

பின்லாந்தில் ஜூலை 16-ம் தேதி அதிபர்கள் ட்ரம்ப் - புதின் சந்திக்க ஏற்பாடு

பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் வரும் ஜூலை 16-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்துப் பேசுகின்றனர்.

உக்ரைன், சிரியா விவகாரங்களால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் வரும் ஜூலை 16-ம் தேதி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: ட்ரம்ப், புதின் சந்திப்பால் இருநாடுகளிடையே நிலவும் பதற்றம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். அமெரிக்காவின் நலனை கருத்திற் கொண்டு ரஷ்ய அதிபர் புதினைச் சந்திக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த சந்திப்பின்போது நட்புறவை மேம்படுத்த ரஷ்யா தயாராக உள்ளதா என்பதை கண்டறிய முடியும். அமெரிக்காவின் நலன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2017 ஜூலை 7-ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்த ஜி 20 மாநாட்டின்போது ட்ரம்பும் புதினும் முதல்முறையாக சந்தித்துப் பேசினர். அதன்பிறகு கடந்த நவம்பரில் வியட்நாமில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டின்போது இரு தலைவர்களும் சந்தித்தனர். இந்நிலையில் இருவரும் மீண்டும் சந்தித்து உள்ளனர். இந்த சந்திப்பு உலக வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும் என்று அமெரிக்க, ரஷ்ய வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x