Published : 29 Jun 2018 08:41 AM
Last Updated : 29 Jun 2018 08:41 AM

ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கு எதிரான சண்டைகளில் சிறுவர்களை முன்னிறுத்தும் தீவிரவாத அமைப்புகள்: ஐ.நா. பொதுச் செயலாளரின் ஆண்டறிக்கையில் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள், இந்திய பாதுகாப்புப் படைக்கு எதிரான சண்டைகளில் சிறுவர்களை முன்னிறுத்துகின்றன என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகளாவிய அளவில் ஆயுத மோதலில் ஈடுபடுத்தப்படும் சிறார் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடுகிறார். 2017-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன், இந்தியா, பிலிப்பைன்ஸ், நைஜீரியா உட்பட 20 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்களில் கடந்த 2017-ம் ஆண்டில் 10,000 சிறுவர், சிறுமிகள் பலியாகி உள்ளனர். 8 ஆயிரம் சிறுவர்கள் ஆயுத போராட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் காஷ்மீர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான சண்டைகளில் சிறுவர்களை முன்னிறுத்துகின்றன. குறிப்பாக காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஏராளமான சிறுவர்களை ஈடுபடுத்தி வருகிறது. அந்த அமைப்புகள் சிறுவர்களை உளவாளிகளாகவும் பயன்படுத்துகின்றன.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் செயல்படும் பல மதரஸாக்கள் மற்றும் தீவிரவாத முகாம்களில் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயிற்சி பெறும் சிறுவர், சிறுமிகள் தற்கொலைப்படை தீவிரவாதிகளாகவும் மாற்றப்படுகின்றனர். அந்த நாட்டில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியாகும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் சிந்து மாகாணம் சேவான் பகுதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர். இதில் 20 பேர் சிறுவர்கள்.

ஆப்கானிஸ்தானில் 2017-ம் ஆண்டில் நடந்த சண்டைகளில் 3,179 சிறுவர், சிறுமியர் பலியாகி உள்ளனர். அங்கு செயல்படும் தீவிரவாத அமைப்புகளில் சிறுவர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். இவை கவலை அளிக்கின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x