Last Updated : 25 Jun, 2018 09:08 PM

 

Published : 25 Jun 2018 09:08 PM
Last Updated : 25 Jun 2018 09:08 PM

48 டிகிரி செல்சியஸ் சஹாரா பாலைவனத்தில் 13,000 அகதிகளை நிர்கதியாக்கிய கொடூரம்: எங்கு செல்கிறது மனித குலம்?

 

கடந்த 14 மாதங்களில் அல்ஜீரியா அரசு சுமார் புலம்பெயர்ந்தோர் 13,000 பேர்களை கொதிக்கும் சஹாரா பாலைவனத்தில் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று நிர்கதியாக விட்டுவிட்டு வந்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதில் நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட அனைவரும் அடங்குவர். உணவு, குடிநீரின்றி துப்பாக்கி முனையில் இவர்களை கொதிக்கும் சஹாரா வெயிலில் நடத்திச் சென்றதும் அதிர்ச்சியேற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்தோர்களான இவர்களை 48 டிகிரி செல்சியஸ் வெயிலில் அழைத்து வந்து அப்படியே சோறு, தண்ணியின்றி நிர்கதியாக்கியுள்ளது ஈவு இரக்கமற்ற அல்ஜீரிய அரசு.

இதில் சிலர் 15 கிமீ ஆளற்ற பகுதியைக் கடந்து அசமாக்கா கிராமத்தை அதிர்ஷ்டவசமாகக் கண்டடைந்தனர். மற்றவர்கள் பாலைவனத்தில் கொதிக்கும் வெயிலில் அலைந்து திரிந்தனர், அப்போது ஐநா மீட்புக் குழு இவர்களை மீட்டுள்ளது. ஆனால் எண்ணற்றோர் இதில் காணாமல் போயுள்ளனர், இவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதில் அங்கு இருந்து எப்படியோ ஊரைக் கண்டுபிடித்து சேர்ந்தவர்களில் 24 பேர்களை அசோசியேட் பிரஸ் பேட்டி கண்டபோது தங்களுடன் வந்த பலரும் சஹாராவுக்கு இரையானார்கள் என்று தெரிவித்து அதிர்ச்சியளித்தனர்.

“பெண்கள் பிணமாகக் கிடந்தனர், மற்றவர்கள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை” என்று கர்ப்பவதியான ஜேனட் கமாரா என்பவர் தெரிவித்தார்.

இரண்டு இரவுகள் சஹாராவின் பயங்கர இரவுச் சப்தத்துடன் அங்கு இருந்ததாக அவர் ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார், என் குழந்தைகளை நான் இழந்து விட்டேன், இங்கு நேரம், காலம் எதுவும் தெரியவில்லை. இன்னொரு பெண் தன் கைக்குழந்தையை இழந்துள்ளார்.

அல்ஜீரியாவிலிருந்து அகதிகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் நுழைவதைத் தடுக்குமாறு ஐரோப்பிய யூனியன் அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி அளித்தது, அதனால் அகதிகளை அப்புறப்படுத்தும் கொடூர நடவடிக்கை அக்டோபர் 2017-லிருந்து தொடங்கியது.

அல்ஜீரியா இத்தனைக்கும் ஐரோப்பாவிடமிருந்து 2014-17-ல் 111.3 மில்லியன் டாலர்கள் உதவித்தொகை பெற்றுள்ளது.

 

நூற்றுக்கணக்கானோரை லாரியில் அடைத்து சஹாராவில் கொண்டு வந்து இறக்கி விட்டுப் பிறகு துப்பாக்கி முனையில் எங்கோ கொண்டு விட்டுச் செல்கிறது அல்ஜீரிய ராணுவம். ஆயிரக்கணக்கானோர் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கொதிக்கும் 48 டிகிரி வெயிலில் சஹாராவில் சுற்றித் திரிந்துள்ளனர், சோறு, தண்ணி இல்லாமல். இதற்கான வீடியோ ஆதாரங்கள் ஏ.பி.வசம் உள்ளன, மாதக்கணக்கில் இதனை ஏ.பி. பார்த்து பதிவு செய்து வருகிறது

“அல்ஜீரியாவிலிருந்து நம்மை வெளியேற்றுகின்றனர், நம் மீது கருணை இல்லை” என்பதை ரகசியக் குரல்களில் பேசியவாறே சிலர் சஹாராவில் வந்து இறங்குகின்றனர். அதில் தன் உடலில் செல்பேசியை மறைத்து வைத்திருக்கும் ஓர் அகதி, ‘இவர்களைச் சும்மா விடக்கூடாது, ஈவு இரக்கமற்ற இவர்களை அம்பலபடுத்துவோம்’ என்று சூளுரைத்துள்ளார்.

ஆனால் அல்ஜீரியா இதனை வழக்கம் போல் மறுத்துள்ளது, தன் நாட்டின் மீது களங்கம் சுமத்த மேற்கொள்ளப்படும் விஷமப் பிரச்சாரம் என்று கூறுகிறது.

பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது, கேட்பதற்கு நாதியில்லை என்ற ரீதியில் அகதிகள் பலரும் செய்தி நிறுவனத்திடம் கூரியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x