Last Updated : 22 Jun, 2018 08:54 PM

 

Published : 22 Jun 2018 08:54 PM
Last Updated : 22 Jun 2018 08:54 PM

கணவனுக்கு சயனைடு கொடுத்து கொலைசெய்து நாடகம்; டைரியால் சிக்கிய இந்திய ஜோடிக்கு 20 ஆண்டுகள் சிறை

தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு சயனைடு கலந்த ஜூஸ் கொடுத்து தற்கொலை என்று நாடகமாடிய இந்தியப் பெண்ணுக்கும், முன்னாள் காதலருக்கும் 20 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறை தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இந்தியப் பெண் தனது காதலருக்கு எழுதிய டைரிதான் இருவரும் சிக்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதனால், இந்தியப் பெண்ணுக்கு 22 ஆண்டுகளும், காதலனுக்கு 27 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சோபியா ஷாம் (வயது34). இவரின் முன்னாள் காதலர் அருண் கமலாசன் (வயது36) ஆகிய இருவருக்கும்தான் தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தவிவரம் வருமாறு:

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சோபியா ஷாம், ஜான் ஆபிரஹாம் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இவர்கள் இருவரும் மெல்போர்ன் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மெல்போர்னில் உள்ள தனது வீட்டில் ஆபிரஹாம் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் ஆபிரஹாம் சட்டையில் சயனைடு குப்பி இருந்ததால், சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்துவிட்டனர். ஆனால், வெளியில் வழக்கை முடித்துவிட்டதாக போலீஸார் கூறினாலும், அவர்களுக்கு ஆபிரஹாம் இறந்ததில் பல்வேறு சந்தேகங்கள் இருந்தன.

இதில் ஆபிரஹாமின் மனைவி சோபியா, அடிக்கடி ஒரு இளைஞருடன் வெளியே ஹோட்டலில் சந்திப்பதை போலீஸார் நோட்டமிட்டனர். இருவரின் பழக்கமும், பழகும் விதமும் நெருக்கமாக இருந்ததால், போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. ஒரு நாள் சோபியா தனது கைப்பட எழுதிய டைரியை அந்த இளைஞருக்குக் கொடுக்கும் போது, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இருவரிடம் நடத்திய விசாரணையிலும், அந்த டைரியில் எழுதப்பட்டு இருந்த பல்வேறு தகவல்களாலும் இருவரும் போலீஸிடம் சிக்கினார்கள். அந்த டைரியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சோபியாவின் முன்னாள் காதலர் அருண் கமலாசன். இவரைத் தான் சோபியா அடிக்கடி வெளியே சென்று சந்தித்துள்ளார். இருவரும் கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால், திருமணம் செய்து கொள்ளவில்லை. அருண் கமலாசன் புகழ்பெற்ற கட்டிட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஆபிரஹாமைத் திருமணம் செய்துகொண்ட சோபியா கடந்த 2012-ம் ஆண்டு தனது 6 வயது மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கு கணவருடன் குடியேறிவிட்டார். இதை அறிந்த அருண் கமலாசனும், கேரளாவில் தனது மனைவி, குழந்தைகளைத் தவிக்கவிட்டு, கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆஸ்திரேலியாவில் சோபியாவும், அருணும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.

இவர்களின் தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்ததால், சோபியா, தனது கணவருக்கு பழரசத்தில் சயனைடு கலந்து கொடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்தார். இருவரும் இதை விசாரணையில் போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சோபியாவையும், அருணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக மெல்போர்ன் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பால்கோக்லன் தீர்ப்பை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சோபியாவும், அவருடைய காதலர் அருண் கமலாசன் ஆகிய இருவரும்சேர்ந்து சதி செய்து ஆபிரஹாமுக்கு பழரசத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் உறுதியானது. கொலையில் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இருவரும் சயனைடை கொலை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், புலனாய்வு அதிகாரிகள் நீண்ட விசாரணைக்கு பின், டைரியின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இருவரையும் கண்டுபிடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தொடர்பின் அடிப்படையில் இந்தக் கொலையை இருவரும் செய்துள்ளனர்.

இந்த கொலையைச் செய்த அருண் கமலாசனுக்கு 27ஆண்டுகள் சிறையும், சோபியா ஷாமுக்கு 22 ஆண்டுகள் சிறையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன். இதில் கமலாசனுக்கு 23 ஆண்டுகளுக்கும், சோபியாவுக்கு 18 ஆண்டுகள் வரையிலும் பரோல் வழங்கக்கூடாது.

இவ்வாரு நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x