Published : 22 Jun 2018 03:21 PM
Last Updated : 22 Jun 2018 03:21 PM

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 42 இந்தியர்கள் கைது; இந்த வாரத்தில் 2வது நடவடிக்கை

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மேலும் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் இது இரண்டாவது சட்டவிரோத நுழைவுக் கைதுகளாகும்.

முன்னதாக 52 இந்தியர்கள் ஆரிகானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குடியேற்ற விதிமுறைகளைக் கண்டிப்பாக அமலாக்கம் செய்து வரும் அமெரிக்க முகமைகள் இந்தத் தகவல்களைத் தாமே அளிக்க முன்வருவதில்லை. இந்திய அதிகாரிகள் குடியேற்ற மற்றும் கஸ்டம்ஸ் அமலாக்கப் பிரிவை அணுகிய பிறகே இந்த கைதுத் தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்க வாழ் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கைதுகள் பற்றிய தகவல்களை அளித்ததையடுத்து மத்திய அரசு இந்த விவரங்களைப் பெற்றுள்ளது.

நியுமெக்சிகோவில் இதற்காகவென்றே உருவாக்கப்பட்டுள்ள சிறை போன்ற அமைப்பில் 42 இந்தியர்களை சமீபமாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைய முயன்று கைதாகும் சூழ்நிலை அதிகரிக்கும் என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றில் கூறும்போது, “சட்டவிரோதமாக நுழைபவர்களை பிடித்து வைக்கும் 2 முகாம்களில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். நாங்கள் சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம்” என்று கூறியுள்ளது.

பிடித்து வைக்கப்பட்டவர்களுக்கு தூதரகமட்ட உதவி தேவைப்படுகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் யாரை வேண்டுமானலும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

பிடிபட்டவர்களில் பெரும்பாலும் தனிநபர்கள்:

ஏற்கெனவே வந்த செய்திகளின் படி குடும்பசகிதமாக உள்ளே நுழைபவர்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிப்பதாக வரும் செய்திகள் தவறு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனாலும் இவர்கள் சட்ட விரோதமாக உள்ளே நுழையும் போது பிடிக்கப்பட்டார்களா அல்லது அவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று பிடித்து வரப்படுகின்றனரா என்பதும் தெரியவில்லை.

இது குறித்து பெயர் கூற விரும்பாத நபர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “இதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்னவெனில் அமெரிக்காவுக்குள் நுழைய தரகர்களுக்கு பெரிய தொகை கொடுத்து வருகின்றனர் என்று புரிகிறது” என்று கூறியுள்ளார்.

பெரும்பாலும் தனிநபர்களே சிக்குவதாகவும், பெரும்பாலும் பஞ்சாப் சீக்கியர்கள், மற்றும் ஆந்திராவிலிருந்து சிலபல கிறித்துவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக அங்கு நுழைய முயற்சி செய்து சிக்கியுள்ளனர்.

ஆரிகானில் பிடித்து வைக்கப்பட்டவர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறும்போது, இந்தியாவில் மத அடக்குமுறை காரணமாக இங்கு அரசியல் புகலிடம் தேடி வந்ததாகத் தெரிவித்துள்ளனர், அரசியல் புகலிடம் என்று இவர்கள் கூறும்பட்சத்தில் இந்திய தூதரகம் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிகிறது. சிக்கியவர்களின் இத்தகைய கோரல்களை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் நிர்ணயித்து முடிவெடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x