Published : 22 Jun 2018 03:09 PM
Last Updated : 22 Jun 2018 03:09 PM

நாய்கறிக்கு தென்கொரியாவில் திடீர் தடை: சோகமயமான உணவுத் திருவிழா

தென் கொரியாவில் நாய் கறி விற்பனை அமோகமாக நடந்து வரும் நிலையில், இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. நாய்கறி திருவிழா கொண்டாடப்படும் நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையால் அசைவ பிரியர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆடு, கோழி, மீன் போன்றவை அசைவ பிரியவர்களின் உணவாக உள்ளது. ஆனால் சீனா மற்றும் தென் கொரியாவில் அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி உண்பது நாய் கறியை தான். சில நாட்கள் இடைவெளியில் மக்கள் நாய் கறியை தவறாமல் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் தெரு நாய்களுக்கு டிமாண்ட் முடிந்து நாய்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. வீடுகளில் கூட செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்க முடியாத அளவிற்கு நாய்களுக்கு பெரும் தேவை ஏற்பட்டது.

இதையடுத்து பண்ணைகளில் கோழிகளை வளர்ப்பது போல அங்கு நாய்களை வளர்த்து வருகின்றனர். தென் கொரியா முழுவதும் சுமார் 17 ஆயிரம் நாய் பண்ணைகள் உள்ளன. மக்கள் தொகையில் 40 சதவீத்திற்கும் மேற்பட்டோர் நாய் கறியை விருப்பமுடன் சாப்பிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

‘பீட்டா’வை போலவே தென் கொரியாவில்,  இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிராக ‘கேர்’ அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. பண்ணைகளில் இருந்து பிடித்துச் செல்லப்படும் நாய்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இறைச்சிக்காக பயன்படுத்துவதாக கேர் அமைப்பு புகார் கூறி வருகிறது.

நாய் கறியை பிரபலபடுத்துவதற்காக சீனா மற்றும் தென் கொரியாவில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாய் கறி திருவிழா நடைபெறுகிறது.

இதற்காக பிரத்யேகமாக நாய் கறி உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. நாய் கொன்று முழு உடலை சுட்டு அதில் அரிசியை போட்டு கொதிக்க வைத்த தயாரிக்கப்படும் உணவு தென் கொரியாவில் பிரபலம். இந்த உணவை சாப்பிடுவதற்காக பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிராக கேர் அமைப்பு தென் கொரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில்  நாய் பண்ணையாளர் ஒருவர் மீது புகார் கூறப்பட்டு இருந்தது. ‘‘உலகம் முழுவதும் மக்களின் நண்பனாகவே நாய்கள் பார்க்கப்படுகின்றன. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. அத்தகைய நாயை கொஞ்சமும் கவலையின்றி கொல்கின்றனர். நாய்களின் அன்பை தென் கொரிய மக்கள் மறக்கும் சூழல் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தென் கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வதை சட்டவிரோதம் என நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. மேலும் நாய் பண்ணை உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நாய் கறி திருவிழா நடைபெற்று வரும் வேளையில் நாய்களை கொல்ல விதிக்கப்பட்ட தடை தென் கொரிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x