Last Updated : 22 Jun, 2018 12:58 PM

 

Published : 22 Jun 2018 12:58 PM
Last Updated : 22 Jun 2018 12:58 PM

அரசு பொது மருத்துவமனையில் குழந்தை பெற்ற நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. அவர் நாளை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

பதவியில் இருக்கும் போது, குழந்தைப் பெற்ற 2-வது பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆவார். இதற்கு முன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், மறைந்த பெனசீர் பூட்டோ பதவியில் இருந்தபோது, குழந்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் இருந்து வருகிறார். மிக இளம் வயதிலேயே பிரதமராக பொறுப்பேற்ற பெண் இவர். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக  இருக்கும் கிளார்க் கோபோர்ட்டை திருமணம் செய்துள்ள ஜெசிந்தா கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, நேற்று காலை 5.30 ஆக்லாந்து பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று மாலை 4.45 மணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த புகைப்படத்தை அவர் ட்விட்டரிலும், இன்ஸ்ட்ராகிராமிலும் வெளியிட்டார். அவருக்கு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் நியூசிலாந்து பிரதமர் செசிந்தாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இன்று முழுவதும் மருத்துவமனையில் தங்கி இருக்கும் பிரதமர் ஜெசிந்தா, நாளைக் காலை டிஸ்சார்ஜ்செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தையைப் பார்த்துக்கொள்ள 6 வாரங்கள் ஜெசிந்தாவின் கணவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் குழந்தை பெற்றுள்ள நிலையில் அவரின் பணிகளை துணைப்பிரதமர் கவனிப்பார்.

இது குறித்து பிரதமர் ஜெசிந்தாவின் பெற்றோர் ரோஸ், லாரல் ஆர்டெர்ன் கூறுகையில், ஜெசிந்தாவும் அவரின் குழந்தையும் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கிறார்கள். குழந்தை நன்றாகச் சுறுசுறுப்பாக இருக்கிறது. குழந்தை ஜெசிந்தாவைப் போலவே இருக்கிறது. நான் உயிரோடு இருக்கும் போதே ஜெசிந்தாவின் குழந்தையைப் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x