Published : 22 Jun 2018 07:44 AM
Last Updated : 22 Jun 2018 07:44 AM

மின்னணு இயந்திரத்தில் மோசடி நடந்ததாக வழக்கு: இராக் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை கைகளால் எண்ண உத்தரவு

இராக் நாடாளுமன்றத் தேர்த லில் பதிவான வாக்குகளை கைகளால் எண்ண அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இராக் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மே 12-ம் தேதி நடைபெற்றது. இதில் முதல் முறையாக மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. புதிய நடைமுறையின்படி வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையை மின்னணு இயந்திரத்தில் செருகி, விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். வாக்காளரின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகு அவருக்கு பிரத்யேக வாக்குச்சீட்டு வழங்கப்படும். அதில் வாக்கை பதிவு செய்த பிறகு, அங்குள்ள ஸ்கேனரில் வாக்குச் சீட்டை செலுத்த வேண்டும். அந்த ஸ்கேனர் இயந்திரம், யாருக்கு வாக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்பதை பதிவு செய்து கொள்ளும்.

பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றாக புதிய நடைமுறையின் மூலம் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த மே 14-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 329 தொகுதிகளில் ஷியா மதகுரு முக்ததா அல் சதர் தலைமையிலான கூட்டணி 54 இடங்களைக் கைப்பற்றியது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹைதி அல்-ஆமிரி தலைமையிலான கூட்டணி 47 இடங்களையும் தற்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாதி நாசர் தலைமையிலான கூட்டணி 42 இடங்களையும் பெற்றது. ஆட்சியமைக்க 165 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த பின்னணியில், தேர்தலின்போது ஏராளமான மோசடி கள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக ஸ்கேனர் இயந்திரத்தில் மோசடி நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அனைத்து வாக்குச்சீட்டுகளை யும் மீண்டும் கைகளால் எண்ண வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளையும் கைகளால் எண்ண உத்தரவிட்டது. அதன்படி சுமார் 1.1 கோடி வாக்குகள் கைகளால் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x