Published : 10 Jun 2018 09:09 AM
Last Updated : 10 Jun 2018 09:09 AM

ட்ரம்ப், கிம் இன்று சிங்கப்பூர் வருகை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் இன்று சிங்கப்பூர் வருகின்றனர்.

கனடாவின் கியூபெக் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து நேரடியாக இன்று மாலை அவர் சிங்கப்பூர் செல்கிறார். அங்குள்ள ஷாங்கிரி-லா ஓட்டலில் ட்ரம்ப் தங்குகிறார். ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட இந்த ஓட்டலில் 792 அறைகள் உள்ளன. ஓட்டல் முழுவதும் அமெரிக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

12-ம் தேதி சந்திப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் இன்று சிங்கப்பூர் வருகிறார். அவர் செயின்ட் ரெஜிஸ் ஓட்டலில் தங்குகிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிம் கூறியிருப்பதால் அந்த ஓட்டலில் சிங்கப்பூர் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வரும் 12-ம் தேதி ட்ரம்பும் கிம்மும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச உள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை தொடங்கிவிடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

2 செய்தியாளர்கள் கைது

ட்ரம்ப் - கிம் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க உலகம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஒழுங்கு முறைகளை மீறியதாக தென்கொரியாவைச் சேர்ந்த 2 செய்தியாளர்கள் நேற்று முன்தினம் பிடிபட்டனர். வடகொரிய தூதரக அலுவலக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இருவரும் தென்கொரியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சிங்கப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சீனா அச்சம்

தென்கொரியாவில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளது. வடகொரியாவும் தென்கொரியாவும் இணைந்தால் அமெரிக்க ராணுவம் வடகொரிய எல்லைக்கு வந்துவிடும். வடகொரியா-சீன எல்லையில் அமெரிக்க ராணுவம் முகாம் அமைக்கும் என்று சீனா அஞ்சுகிறது.

இதுவரை வடகொரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்கியது. அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது ஐ.நா. சபை கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த பொருளாதாரத் தடைகளை சீனா அமல்படுத்தியதால் வடகொரியா பொருளாதாரரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பிறகே அமைதி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா இறங்கிவந்தது.

சிங்கப்பூர் சந்திப்பு குறித்து சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x