Published : 02 Jun 2018 08:42 AM
Last Updated : 02 Jun 2018 08:42 AM

உலக மசாலா: கருத்து தெரிவிப்பதில் கவனம்

நி

யூயார்க்கைச் சேர்ந்த மிஷெல் லீவைன் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மன்ஹாட்டனில் உள்ள மகளிர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வலைதளத்தில் விமர்சனமாக எழுதினார். இப்போது அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஜூன் சாங், 6.72 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, அவதூறு வழக்கு போட்டிருக்கிறார்! ‘‘2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கமான பரிசோதனைக்காக நியூயார்க் ரோபோடிக் மகளிர் மருத்துவமனைக்குச் சென்றேன். ஒரு வாரம் கழித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்தது. பரிசோதனைக்குச் செலவான 87 ஆயிரம் ரூபாயில் 29 ஆயிரம் என்னுடைய பாலிசி தொகையில் சேராது என்பதால், அதைக் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமான பரிசோதனைகளுக்கு என் பாலிசி தொகையே போதும். எப்படித் தொகை அதிகமானது என்று மருத்துவமனையில் கேட்டேன். அவர்கள் கோபமானார்கள். நான் இடுப்பில் கொஞ்சம் வலி இருப்பதாகச் சொன்னதால், ஸ்கேன் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். என் அனுமதியின்றி, எனக்குத் தெரியாமல் எப்படி இதைச் செய்யலாம் என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை. தேவையின்றி எனக்கு அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டதாக நினைத்தேன். அந்த ஏமாற்றத்திலும் பணம் அதிகம் செலவான வருத்தத்திலும் இருந்தேன். என்னுடைய கருத்துகளை வலைதளத்தில் எழுதினேன். இனிமேல் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதைப் பார்த்து இன்னும் சில வலைதளங்கள் என்னை எழுதச் சொல்லிக் கேட்டன. அவற்றிலும் என் கருத்துகளைத் தெரிவித்தேன். அவ்வளவுதான். பிறகு எழுதியதையே மறந்துவிட்டேன். இப்போது மருத்துவர் ஜூன் சாங் என் மீது அவதூறு வழக்கு போட்டு, நஷ்ட ஈடும் கேட்டிருக்கிறார். என்னிடமிருந்து அதிகமான தொகை வசூலித்ததோடு, முறையான விளக்கத்தையும் அந்த மருத்துவமனை தரவில்லை. அதனால்தான் நான் எழுதினேன். இதில் தவறு என்ன இருக்கிறது? நான் எதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும்?” என்று கேட்கிறார் மிஷெல் லீவைன்.

“மருத்துவமனைகளைப் பற்றி எழுதும்போது மிகக் கவனமாக எழுத வேண்டும். தவறான தகவல்களைப் பரப்பினால் அது மருத்துவமனையின் எதிர்காலத்தையே பாதித்துவிடும். தவறான தகவல்களை அளித்ததோடு, ஒரு ஸ்டார் வேறு கொடுத்திருக்கிறார் மிஷெல். இது என் கட்சிக்காரரான ஜூன் சாங்கையும் அவரது மருத்துவமனையையும் மிகவும் பாதித்து இருக்கிறது. இவருக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் மருத்துவரிடம் கேட்டு, தெளிவு பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கை விடுவதாக இல்லை. இதன் மூலமே என் கட்சிக்காரர் இழந்த மதிப்பை மீட்டெடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் கண்டதையும் எழுதுபவர்கள் கொஞ்சம் யோசித்து இனி எழுதவும் செய்வார்கள” என்கிறார் மருத்துவரின் வழக்கறிஞர். இதுவரை வழக்குக்காக 13.5 லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டார் மிஷெல். 6.72 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகக் கொடுப்பதற்கு அவரிடம் பணம் இல்லை. அதனால் மக்களிடம் நன்கொடை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால் மிகவும் சொற்பமான தொகையே கிடைத்திருக்கிறது. நோயாளிகளுக்குச் சாதகமாகச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் இவர்.

கருத்து தெரிவிப்பதில் கவனம் தேவை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x