Published : 01 Jun 2018 08:41 AM
Last Updated : 01 Jun 2018 08:41 AM

உலக மசாலா: கேக்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம்

ஷ்யாவைச் சேர்ந்த 31 வயது எலினா நட், உலகிலுள்ள முக்கியமான கேக் கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். ஒரு சிற்பம்போல் ஒவ்வொரு கேக்கையும் செதுக்கியிருக்கிறார். இவற்றைப் பார்க்கும்போது கேக் என்றே தோன்றுவதில்லை. சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் வருவதில்லை. அப்படியே வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று தோன்றும். “எனக்கு சமையல் கலையில் ஆர்வம் அதிகம். என்னுடைய ஆர்வத்தை கேக் மீது திருப்பினேன். உலகில் உள்ள மிகச் சிறந்த கேக் கலைஞர்களில் இருந்து என்னுடைய கேக் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக நிறைய உழைத்தேன். என்னுடைய உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க ஆரம்பித்தது. வியாபாரம் பெருகியது. 2015-ம் ஆண்டிலிருந்து இன்ஸ்டாகிராமில் நான் செய்யும் கேக்குகளின் படங்களை வெளியிட்டு வருகிறேன். 1.5 லட்சம் மக்கள் என்னைப் பின்தொடர்கிறார்கள். என்னைப் பற்றி யாரும் பேச வேண்டாம்; என் படைப்பைப் பற்றிப் பேச வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஒவ்வொரு கேக்கையும் செய்வதற்கு முன்பு திட்டமிடுவேன். தாளில் வரைந்துகொள்வேன். என் கேக்குகளில் இருக்கும் பூக்கள் இனிப்பால் செய்யப்பட்டவை. அவற்றையும் சுவைக்கலாம்” என்கிறார் எலினா நட்.

சாப்பிட வேண்டாம்; பார்த்துக்கொண்டே இருக்கலாம்!

சீ

னாவின் ஹாங்ஸோவ் நகரில் இருக்கிறது நம்பர் 11 நடுநிலைப் பள்ளி. இங்கே வகுப்புகளில் மாணவர்களின் முகத்தை 30 நொடிகளுக்கு ஒருமுறை படம் பிடித்துக் காட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை ஆர்வமாகக் கவனிக்கிறார்களா, இல்லையா என்பதை ஆசிரியரால் தெரிந்துகொள்ள முடியும். இதை ‘ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் பிஹேவியர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்’ என்று அழைக்கிறார்கள். கரும்பலகைக்கு மேலே பொருத்தப்பட்டிருக்கும் இந்த கேமராவில் கவனம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், கோபம், பயம், ஆச்சரியம் போன்ற உணர்ச்சிகள் பதிவாகும். இதை ஆசிரியரின் மானிட்டருக்குத் தகவலாக அனுப்பிவிடும். நான்காவது வரிசையில் 2-வதாக அமர்ந்திருக்கும் மாணவன் வேடிக்கை பார்க்கிறான் என்று தகவல் சொல்லும். உடனே ஆசிரியர் அந்த மாணவனைக் கவனித்து, உரிய நடவடிக்கை எடுப்பார். “கேமரா வந்த பிறகு நிறைய மாணவர்களின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. பாடத்தில் கவனமாக இருக்கிறார்கள். மதிப்பெண்களும் அதிகம் வாங்குகிறார்கள். இந்த கேமரா ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கிறது” என்கிறார் ஆசிரியர் வாங் சூ. “எங்களை எப்போதும் 2 கண்கள் கவனிக்கின்றன என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. அப்படி, இப்படித் திரும்பினால் ஆசிரியரிடம் கேமரா காட்டிக் கொடுத்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” என்கிறார் ஒரு மாணவர். இன்னொரு மாணவர், “முன்பெல்லாம் விளையாட்டுத்தனமாக இருப்பேன். இப்போது பாடத்தை கவனிக்கிறேன். அதிக மதிப்பெண் வாங்குகிறேன்” என்கிறார். ‘இது பள்ளியா, ஹிட்லரின் வதை முகாமா?’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

ஐயோ… என்ன கொடுமை இது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x