Last Updated : 09 Apr, 2018 07:38 AM

 

Published : 09 Apr 2018 07:38 AM
Last Updated : 09 Apr 2018 07:38 AM

மாலத்தீவில் சீனாவின் ராணுவ தளம்: கவலை அளிப்பதாக அமெரிக்கா கருத்து

மாலத்தீவில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான அகமது நசீம் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர் கூறும்போது, “மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுகிறது. மேலும் நிலம் கையகப்படுத்தும் பணியிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. தனது ராணுவ படைத்தளத்தை நிறுவவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனது போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை மாலத்தீவில் நிறுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதைத் தடுக்காவிட்டால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்” என்றார்.

இதுதொடர்பான பிடிஐ செய்தியாளரின் கேள்விக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் (தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா) ஜோசப் பெல்டர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

சர்வதேச சட்டங்கள், பிராந்திய பாதுகாப்பு உடன்படிக்கைகள், வர்த்தக ஒப்பந்தங்களுக்கு உட்பட்ட ஒழுங்குநிலை இந்தியா பசிபிக் பிராந்தியத்தில் இருக்கவேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதிபட உள்ளது. சிறிய நாடாக இருந்தாலும், பெரிய நாடாக இருந்தாலும் இதன்படி நடப்பதுதான் அனைவருக்கும் நல்லது. இதைத்தான் அமெரிக்காவும் விரும்புகிறது. இந்நிலையில் மாலத்தீவில் ராணுவ தளம் அமைக்க சீனா முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்தியா- பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்ட ஒழுங்குநிலையை பராமரிக்க வேண்டும் என்பதை ஆதரிக்கும் எல்லா நாடுகளுக்குமே சீனாவின் நடவடிக்கைகள் கவலை தரக்கூடியதே. அந்த பிராந்தியத்தில் உள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் இது கவலை தரக்கூடியதுதான் என கருதுகிறேன். ஜிபூட்டி, பாகிஸ்தானின் க்வாதர், இலங்கையின் ஹம்பன்தோட்டா ஆகிய பகுதிகளில் சீனா இதுபோன்ற செயலில் ஈடுபட்டது. இப்போது மாலத்தீவில் ஈடுபடுகிறது. இது இன்னும் வேறு பகுதிகளிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

மாலத்தீவில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x