Published : 06 Apr 2018 08:34 AM
Last Updated : 06 Apr 2018 08:34 AM

மெக்ஸிகோ எல்லையில் போதை பொருள் கடத்தல், ஊடுருவலை தடுக்க அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிப்பு: அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு

மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க ராணுவ வீரர்களை குவிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தர விட்டுள்ளார்.

அமெரிக்கா, மெக்ஸிகோ நாடுகளின் எல்லை சுமார் 3,145 கி.மீ. நீளம் கொண்டது. இந்த எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

தற்போது மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க சுங்க, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ராணுவ வீரர்களையும் காவல் பணியில் ஈடுபடுத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்க உள்துறை பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்ஜென் நீல்சன் கூறியதாவது:

மெக்ஸிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றம், போதை பொருட்கள் கடத்தல், சமூகவிரோத செயல்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதன்காரணமாக அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி யாகி உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ராணுவத்தின் தேசிய பாதுகாப்பு படை வீரர்களை மெக்ஸிகோ எல்லை யில் பணியமர்த்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

அதிபர் உத்தரவை எல்லையோர மாகாணங்களான டெக்சாஸ், அரிசோனா, நியூ மெக்ஸிகோ ஆளுநர்கள் வரவேற்றுள்ளனர். அரிசோனா ஆளுநர் டக் டியூசி கூறியபோது, “பாதுகாப்பு படை வீரர்களை எல்லையில் குவிப்பதால் சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

டெக்சாஸ் ஆளுநர் கிரீக் அபோட் கூறியபோது, “தெற்கு எல்லைப் பாதுகாப்பில் அரசு அக்கறை காட்டுவது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

நியூ மெக்ஸிகோ ஆளுநர் சூசானா மார்ட்டின் கூறியபோது, “அதிபர் ட்ரம்பின் முடிவை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

எனினும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் அரசுக்கு அதிக செலவாகும். ஏற்கெனவே ஜார்ஜ் புஷ் காலத்தில் இதுபோன்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x